சுனாமி குழந்தை 81.. நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார்?
சுனாமியில் சிக்கி உயிருடன் மீட்கப்பட்ட 2 மாதக் குழந்தையான சுனாமி குழந்தை 81, தற்போது 20 வயது இளைஞனாக, உயர்கல்வி கனவுடன் காத்திருக்கிறார்.
இலங்கையின் 35 ஆயிரம் பேரை பலிகொண்ட சுனாமிக்கு 2 மாதக் குழந்தை எம்மாத்திரம். ஆனால், அவ்வளவுப் பெரிய ஆழிப்பேரலையில் அபிலாஷா என்ற 2 மாதக் குழந்தை சிக்கி உயிருடன் மீண்டது. இது நவீன கால இயற்கைப் பேரிடர் வரலாற்றின் அதிசயம் என்றும் கூறலாம்.
கடந்த 2004ஆம் ஆண்டு இந்திய பெருங்கடலில் ஏற்பட்ட நிலநடுக்கமும் அதனைத் தொடர்ந்து நேரிட்ட சுனாமி எனப்படும் ஆழிப்பேரலையும் இந்தியா, இலங்கை என பல உலக நாடுகளைப் புரட்டிப்போட்டுச் சென்றது.
அப்போது நடந்த நிகழ்வுகளும் ஊடகங்கள் வாயிலாகப் பார்த்த காட்சிகளும் யார் ஒருவருக்கும் அவரது நினைவிலிருந்து அகலவே அகலாது.
அதுபோலவே, சுனாமி தொடர்பான தகவல்களில் ஒன்றாக சுனாமி குழந்தை 81 பற்றிய தகவல்களும் வெளியாகியிருந்தன.
அதாவது, இலங்கையை சுனாமி அழிப்பேரலைகள் தாக்கி ஆயிரக்கணக்கானோரை கடலுக்குள் இழுத்துச் சென்று பிறகு பிணங்களாக வீசிச் சென்றிருந்தது. ஆனால், இழுத்துச் சென்ற இடத்திலேயே அல்ல.. இந்த பேரழிவின்போது அதாவது 2004ஆம் ஆண்டு டிசம்பர் 26ஆம் தேதி இலங்கையின் அம்பாரா மாவட்டம் கல்முனை கடற்கரையோரம் தேங்கிய ஏராளமான கழிவுகளுக்கு இடையே ஒரு குழந்தையின் அழுகுரல். பிறந்து 2 மாதங்களே ஆன குழந்தை அது.
மீட்புப் படையினர் குழந்தையை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர். அப்போது குழந்தையை சொந்தம் கொண்டாட யாருமில்லை. அந்த மருத்துவமனையில் சுனாமியில் சிக்கி மீட்கப்பட்ட 81வது நபராக (குழந்தையாக) வந்தது இந்தக் குழந்தை என்பதால், மருத்துவமனை முழுக்க குழந்தை 81 என்று அடையாளம் சொல்லப்பட்டது.
பல நாள்கள் யாரும் குழந்தையைத் தேடி வராத நிலையில்தான், ஒரே நேரத்தில் ஒன்பது தம்பதி, அது தங்கள் குழந்தை என சொந்தம் கொண்டாடின. இதனால் தொடர்ந்து குழந்தை மருத்துவமனையிலேயே இருக்க நேரிட்டது.
பிறகு, ஜெயராஜா குடும்பத்தினர், அது தங்கள் குழந்தை அபிலாஷா என சொந்தம் கொண்டாடியதோடு நீதிமன்றம் சென்று மரபணு சோதனை நடத்தி, தங்கள் குழந்தை என்பதை உறுதி செய்து, நீதிமன்ற உத்தரவைத் தொடர்ந்து 2005ஆம் ஆண்டு பிப்ரவரி 16ஆம் தேதி குழந்தை ஜெயராஜா குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது.
பிறகுதான் அவர்களுக்கு வேறொரு சிக்கல் ஏற்பட்டது. ஊடகங்கள் வாயிலாக அவர்களைப் பற்றித் தெரிந்து கொண்ட மக்கள் பலரும், அவர்கள் எங்குச் சென்றாலும் சுனாமி குடும்பம் என்றும், குழந்தை 81 என்று அபிலாஷாவும், பள்ளியில் பிள்ளைகளால் சுனாமி என்றும் அழைக்கப்பட்டது.
இதனால் மனம் நொந்த குடும்பம், இலங்கையின் கிழக்கு மாகாணத்துக்கு குடிபெயர்ந்தனர்.
சுனாமி குறித்து ஜெயராசா கூறுகையில், சுனாமியில் குடும்பத்துடன் சிக்கிக்கொண்டோம். மூன்று நாள்களாக குடும்பத்தினரை தேடிக்கொண்டிருந்தேன். முதலில் எனது தாயை கண்டுபிடித்தேன். பிறகு மனைவி இருக்கும் இடம் தெரிந்தது. ஆனால் மகன்..
மருத்துவமனையில் இருக்கிறான் என்று தகவல் கிடைத்ததும் ஓடோடிச் சென்றால், குழந்தை இல்லை. யாரும் சொந்தம் கொண்டாடாததால், மருத்துவமனை செவிலியர் ஒருவர் குழந்தையை எடுத்துச் செல்ல பெற்றோர் தேடி வந்திருப்பதாகத் தகவல்கிடைத்ததும் குழந்தை மீண்டும் மருத்துவமனைக்குக் கொண்டு வரப்பட்டதாகக் கூறுகிறார்கள்.
எங்கள் குழந்தை என்று சொந்தம் கொண்டாடிய அனைவரையும் மரபணு சோதனை நடத்த நீதிமன்றம் உத்தரவிட்டது. ஆனால் யாரும் முன்வரவில்லை. நாங்கள் சோதனை செய்து எங்கள் குழந்தையை திரும்பப் பெற்றோம் என்கிறார் ஜெயராசா. எங்கள் கதை உலகம் முழுவதும் பரவியதால் அமெரிக்க ஊடகத்திலிருந்து கூட நேர்காணல்கள் நடத்தப்பட்டதாகவும் அவர் கூறியிருந்தார்.
தற்போது அபிலாஷா கூறகையில், பெற்றோர் மூலம் என்ன நடந்தது என்று சொல்லக் கேட்டிருக்கிறேன். ஆனால், அது என்ன அவ்வளவு பெரிய விஷயமா என்றுதான் நினைப்பேன். ஆனால், இப்போது ஓரளவுக்கு எல்லாம் புரியத் தொடங்கியபோதுதான். நாம் எவ்வளவு பெரிய ஆபத்திலிருந்து உயிரோடு மீண்டிருக்கிறோம் என்பது புரிகிறது என்கிறார்.