கிளாட்-2025 தேர்வு: வழக்குகளை உயர் நீதிமன்றத்துக்கு மாற்ற பரிசீலனை!
2025-ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டப்படிப்புகளுக்கான பொது நுழைவுத் தேர்வு தொடர்பான வழக்குகள் அனைத்தையும் ஏதேனும் ஒரு உயர் நீதிமன்றத்துக்கு மாற்றுவது குறித்து பரிசீலிக்கவிருப்பதாக உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தில்லி, கர்நாடகம் உள்ளிட்ட பல்வேறு உயர் நீதிமன்றங்களில், கிளாட் நுழைவுத் தேர்வு 2025-ல் கேட்கப்பட்ட கேள்விகள் பலவும் தவறானவை என்று கூறி பல வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.
இந்த வழக்குகளுக்கு பல வழக்குரைஞர்கள் நியமிக்கப்பட்டு விசாரணைகள் நடைபெறுவதற்கு மாற்றா, பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்துக்கே அனைத்து வழக்குகளையும் மாற்றி, அது தொடர்பான விசாரணையை மேற்கொள்ள பரிசீலிப்பதே சிறந்ததாக இருக்கும் என உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சஞ்சீவ் கன்னா மற்றும் நீதிபதி சஞ்சய் குமார் கொண்ட அமர்வு தெரிவித்துள்ளது.
பல்வேறு உயர் நீதிமன்றங்களில் நிலுவையில் உள்ள ரிட் மனுக்களை ஒரு உயர் நீதிமன்றத்தால் விசாரிக்கப்பட வேண்டும் என்றும், இது விரைவானதாக இருக்கும் என்பதால், பிப்ரவரி 3ஆம் தேதி தொடங்கும் விசாரணையின்போது இது தொடர்பான உத்தரவு வெளியிடப்படும் என்றும், பல்வேறு உயர் நீதிமன்றங்களில் மனுதாரர்களுக்காக ஆஜராகும் வழக்கறிஞர்களுக்கு இது தொடர்பான நோட்டீஸ் அனுப்பப்படும் என்றும் உச்ச நீதிமன்றம் தெரிவித்துள்ளது.