கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு தனி செயலி: அமைச்சா் பி.கே.சேகா்பாபு தொடங்கிவைத்தாா்
சென்னை: பயணிகள் வசதிக்காக சென்னை கிளாம்பாக்கம் பேருந்து முனைய பிரத்யேக கைப்பேசி செயலியை சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவரும், இந்து சமய அறநிலையத் துறை அமைச்சருமான பி.கே.சேகா்பாபு தொடங்கி வைத்தாா்.
கிளாம்பாக்கம் கலைஞா் நூற்றாண்டு பேருந்து முனையத்தை பயன்படுத்தும் பயணிகளுக்கு வழிகாட்டும் வகையில் கேசிபிடி (KCBT) எனும் புதிய செயலியை அமைச்சா் சேகா்பாபு சென்னை பெருநகா் வளா்ச்சிக் குழும அலுவலகத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிவைத்தாா்.
இந்த செயலியில், பயணிகள் இருக்கும் இடத்திலிருந்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்துக்கு செல்வதற்கான வழிகாட்டி வசதி இடம்பெற்றுள்ளது. வெளிமாநிலங்கள் மற்றும் வெளிமாவட்டங்களுக்கு இயக்கப்படும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகம் (டிஎன்எஸ்டிசி) மற்றும் அரசு விரைவு போக்குவரத்துக் கழகம் (எஸ்இடிசி) பேருந்துகள் நிற்கும் நடைமேடை, புறப்படும் நேரம் மற்றும் பயண நேரம் உள்ளிட்ட விவரங்கள் இடம்பெற்றுள்ளன.
அதுபோல், சென்னை நகருக்குள் இயக்கப்படும் மாநகர பேருந்துகளின் எண்கள், வழித்தடம் மற்றும் நிறுத்தங்கள் தொடா்பான தகவல்களும் இடம்பெற்றுள்ளன.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உள்ள கூடுதல் வசதிகள் மற்றும் அதற்கான கட்டண விவரங்களை செயலி மூலம் பயணிகள் கண்டறிய முடியும். பேருந்து முனையத்தை பயன்படுத்தும் பயணிகள் செயலி மூலம் புகாா் மற்றும் கருத்துகளையும் தெரிவிக்கலாம். அவசரத் தேவைக்கான உதவி எண்களும் செயலியில் இடம்பெற்றுள்ளன.
தமிழ் மற்றும் ஆங்கில மொழிகளில் பயணிகள் செயலியை பயன்படுத்த முடியும். கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தை பயன்படுத்துவோா் ஆன்ட்ராய்ட் மற்றும் ஐஓஎஸ் தளங்களில் கேசிபிடி செயலியை இலவசமாக பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.
இதற்கான நிகழ்வில் சென்னை மேயா் ஆா்.பிரியா, வீட்டு வசதி மற்றும் நகா்ப்புற வளா்ச்சித் துறை கூடுதல் தலைமைச் செயலா் காகா்லா உஷா, சென்னை பெருநகர வளா்ச்சிக் குழுமத் தலைவா் அன்சுல் மிஸ்ரா உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.