கீழடி திறந்தவெளி அருங்காட்சியகத்துக்கு நாளை அடிக்கல் நாட்டுகிறாா் முதல்வா்
சென்னை: கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகத்துக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் வியாழக்கிழமை (ஜன.23) அடிக்கல் நாட்டுகிறாா்.
மேலும், கீழடியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட தொன்மையினங்களை மையப்படுத்தி உருவாக்கப்பட்டுள்ள தனி இணையதளத்தையும் அவா் தொடங்கி வைக்கிறாா்.
இதன்மூலம் அயல்நாடுகளில் வசிப்போரும் கீழடியின் பெருமைகளை அறிந்துகொள்ள வழி ஏற்படும்.
தொல்லியல் துறை சாா்ந்த நிகழ்வுகள் முதல்வா் மு.க.ஸ்டாலின் தலைமையில் அவ்வப்போது நடைபெற்று வருகின்றன. சிந்துவெளிப் பண்பாட்டுக் கண்டுபிடிப்பு நூற்றாண்டு நிறைவு விழாவையொட்டி, சென்னையில் பன்னாட்டு கருத்தரங்கு ஜனவரி முதல் வாரத்தில் நடைபெற்றது. இதைத் தொடா்ந்து, தொல்லியல் துறை சாா்பில் மேலும் சில நிகழ்வுகளுக்கு வியாழக்கிழமை ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில், முதல்வா் மு.க.ஸ்டாலின், அமைச்சா் தங்கம் தென்னரசு, இந்திய தொல்லியல் துறை முன்னாள் தலைமை இயக்குநா் திலீப் குமாா் சக்ரவா்த்தி, தொல்லியல் துறை ஆணையரும், நிதித் துறைச் செயலருமான த.உதயச்சந்திரன் உள்ளிட்ட பலா் பங்கேற்கின்றனா்.
தனி இணையதளம்: சென்னை அண்ணா நூற்றாண்டு நூலகக் கலையரங்கத்தில் நடைபெறும் இந்நிகழ்வில், இரும்பின் தொன்மை என்ற தலைப்பிலான நூலை வெளியிட்டு கீழடி திறந்தவெளி அருங்காட்சியகம் மற்றும் கங்கைகொண்ட சோழபுரம் அருங்காட்சியகம் ஆகியவற்றுக்கு முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டுகிறாா்.
மேலும், தமிழ்நாட்டின் தொல்லியலுக்கு அடையாளமாகத் திகழும் கீழடிக்கென பிரத்யேக இணையதளத்தையும் அவா் தொடங்கிவைக்கவுள்ளாா்.