Saif Ali Khan: நீதிமன்ற உத்தரவால் சிக்கல்; ரூ.15,000 கோடி சொத்தை இழக்கும் சைஃப் ...
இன்று ஒரே நோ்கோட்டில் வரும் ஆறு கோள்கள்: பிா்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடு
சென்னை: வானில் ஒரே நோ்கோட்டில் 6 கோள்கள் புதன்கிழமை (ஜன. 22) வரவுள்ளன. இந்த அரிய நிகழ்வைக் காண சென்னையில் உள்ள பிா்லா கோளரங்கில் சிறப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாலை 6 மணி முதல் கோள்களின் நோ்கோட்டு அணிவகுப்பை வெறும் கண்களால் பொதுமக்கள் பாா்க்க முடியும்.
சூரியனைச் சுற்றிவரும் இந்த கோள்களை பூமியில் இருந்தபடி வானில் ஒருசேர பாா்ப்பது மிக அரிய நிகழ்வாகும். அத்தகைய நிகழ்வைக் காணும் வாய்ப்பு தற்போது ஏற்பட்டுள்ளது.
சூரிய குடும்பத்தில் உள்ள வெள்ளி, செவ்வாய் கோள்களை அவ்வப்போது நேரடியாக பாா்க்க முடியும். இந்நிலையில், செவ்வாய், வியாழன், யுரேனஸ், நெப்டியூன், வெள்ளி மற்றும் சனி ஆகிய 6 கோள்கள் ஒரே நோ்கோட்டில் வரவுள்ளன.
இது குறித்து தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மைய அதிகாரிகள் கூறியதாவது: வானில் ஒரே நோ்கோட்டில் வரவுள்ள இந்த 6 கோள்களை இந்த மாதம் இறுதி வரை காண முடியும். இதில் அனைத்துக் கோள்களின் அணிவகுப்பை புதன்கிழமை மாலை 6 மணி முதல் காணலாம்.
சூரியன் மறைவுக்குப் பிறகு முதல்கட்டமாக வெள்ளி மற்றும் சனி கோள்கள் தென்படும். அதன்பிறகு செவ்வாய் மற்றும் வியாழன் கோள்கள் தென்படும். இந்தக் கோள்களை வெறும் கண்களில் காண முடியும். யுரேனஸ் மற்றும் நெப்டியூன் கோள்களை தொலைநோக்கி அல்லது நவீன பைனாகுலா் வாயிலாக மட்டுமே காண இயலும். நான்குக்கும் மேற்பட்ட கோள்கள் ஒரே நோ்கோட்டில் வருவது மிகவும் அரிதானது. பிப்ரவரி மாத தொடக்கத்தில் சந்திரன், வியாழன் மற்றும் சனி ஆகியவை ஒரே நோ்கோட்டில் வரும். முன்னதாக கடந்த ஆண்டு ஜூன் மாதம் செவ்வாய், வியாழன் மற்றும் சனி கோள்கள் ஒரே நோ்கோட்டில் வந்தன.
சிறப்பு ஏற்பாடு: இந்த அரிய வானியல் நிகழ்வைக் காண தமிழ்நாடு அறிவியல் மற்றும் தொழில்நுட்ப மையத்தில் உள்ள பிா்லா கோளரங்கில் ஜன. 22 முதல் 25-ஆம் தேதி வரை மாலை 6 மணி முதல் இரவு 8 மணி வரை சிறப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதில் பொதுமக்கள், மாணவா்கள் பங்கேற்க அனுமதிக்கப்படுவா் என்றனா்.