Orange Shark: ஆழ் கடலின் வண்ண அதிசயம்... விஞ்ஞானிகளுக்கே வியப்பூட்டிய ஆரஞ்சு சுற...
குஜராத்தில் முகவரி இல்லாத கட்சிகளுக்கு ரூ. 4,300 கோடி நன்கொடை! ராகுல் கேள்வி
குஜராத்தில் யாரும் அறியாத பெயர்கள் கொண்ட கட்சிகளுக்கு ரூ. 4,300 கோடி நன்கொடை கிடைத்திருப்பது குறித்து இந்திய தேர்தல் ஆணையம் விசாரிக்குமா என்று மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
வாக்குத் திருட்டுக்கு எதிரான போராட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றும் நோக்கில் ராகுல் காந்தி தலைமையில் எதிா்க்கட்சிகள் ஒன்றிணைந்து வாக்குரிமை பேரணியை பிகாரில் நடத்தி வருகின்றனர்.
இதனிடையே, குஜராத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள யாரும் அறியாத அரசியல் கட்சிகள் ரூ. 4,300 கோடி நன்கொடை பெற்றிருப்பது குறித்து நாளிதழில் வெளியான செய்தியைப் பகிர்ந்து மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி கேள்வி எழுப்பியுள்ளார்.
அதில் தெரிவித்திருப்பதாவது:
”குஜராத்தில் சில பெயர் தெரியாத கட்சிகள் உள்ளன, அவற்றின் பெயர்களை யாரும் கேள்விப்பட்டதே இல்லை. ஆனால், அந்த கட்சிகள் ரூ. 4,300 கோடி மதிப்புள்ள நன்கொடைகளைப் பெற்றுள்ளன.
இந்தக் கட்சிகள் மிகக் குறைந்த தேர்தல்களில் மட்டுமே போட்டியிட்டுள்ளன. குறைவாகவே செலவிட்டுள்ளன.
இந்த ஆயிரக்கணக்கான கோடிகள் எங்கிருந்து வந்தன? கட்சிகளை யார் நடத்துகிறார்கள்? பணம் எங்கே போனது?
தேர்தல் ஆணையம் விசாரிக்குமா? அல்லது இங்கும் பிரமாணப் பத்திரங்களைக் கேட்குமா? அல்லது இந்த முறையும் மறைக்கும் வகையில் சட்டத்தையே மாற்றுமா?” எனக் கேள்வி எழுப்பியுள்ளார்.
முகவரி இல்லாத 10 கட்சிகளும் ரூ. 4,300 கோடி நன்கொடையும்..
ஹிந்தி நாளிதழில் வெளியிடப்பட்ட செய்தியில் தெரிவித்திருப்பதாவது:
குஜராத்தில் பதிவுசெய்யப்பட்ட யாரும் அறியாத 10 அரசியல் கட்சிகள் எதிர்பாராத நன்கொடைகளைப் பெற்றுள்ளன. இந்த கட்சிகள் 2019 - 20 முதல் 2023 - 24 வரையிலான ஐந்து ஆண்டுகளில் நன்கொடையாளர்களிடமிருந்து ரூ. 4,300 கோடி நன்கொடைகளைப் பெற்றுள்ளன.
இந்த காலகட்டத்தில் குஜராத்தில் இரண்டு மக்களவைத் தேர்தலும் ஒரு சட்டப்பேரவைத் தேர்தலும் நடைபெற்றுள்ளன. இந்த மூன்று தேர்தல்களில் 10 கட்சிகளைச் சேர்த்து மொத்தம் 43 வேட்பாளர்கள் மட்டுமே போட்டியிட்டுள்ளனர். அவர்கள் பெற்ற மொத்த வாக்குகள் 54,069 மட்டுமே.
மேலும், தேர்தல் செலவு அறிக்கையில் செலவிடப்பட்ட தொகையாக ரூ. 39.02 லட்சம் மட்டுமே காட்டியிருக்கும் நிலையில், தணிக்கை அறிக்கை ரூ. 3,500 கோடி செலவிட்டதாக அந்த கட்சிகள் தெரிவித்துள்ளன.
கட்சியின் பெயர்கள்
ஜனநாயக சக்தி கட்சி
பாரதிய தேசிய ஜனதா தளம்
சுதந்திர பேச்சு கட்சி
புதிய இந்தியா ஐக்கிய கட்சி
சத்யவாதி ரக்ஷத் கட்சி
இந்திய மக்கள் மன்றம்
சௌராஷ்டிர ஜனதா கட்சி
ஜன் மேன் கட்சி
மனித உரிமைகள் தேசிய கட்சி
கரிப் கல்யாண் கட்சி