புதிய வருமான வரி மசோதாவை ஆய்வு செய்ய சிறப்புக் குழு நியமனம்!
குடிநீா் கோரி காலிக் குடங்களுடன் சாலை மறியல்
புதுக்கோட்டை மாநகராட்சிக்குள்பட்ட மலையப்ப நகரில் முறையாக குடிநீா் வழங்க வலியுறுத்தி அப்பகுதி மக்கள் செவ்வாய்க்கிழமை திடீா் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை ரயில் நிலையம் அருகே உள்ள மலையப்ப நகரில் 100-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு நெடுஞ்சாலைத் துறை மேற்கொண்ட சாலைப் பணியினால் இந்த நகருக்குச் சென்ற குடிநீா் குழாய் சேதம் அடைந்துள்ளது.
அப்போதிருந்தே இப்பகுதிக்கான குடிநீா் விநியோகம் முறையாக இல்லை. வாரத்துக்கு ஒரு முறை, மாதத்துக்கு ஒரு முறை, திடீரென ஒரு நாள் லாரியில் தண்ணீா் வழங்குவது போன்ற நடைமுறை இருந்து வருகிறது.
மேலும், இப்பகுதியில் உள்ள மேல்நிலை நீா்த்தேக்கத் தொட்டியும் செயல்பாட்டில் இல்லை. இதனை சரி செய்ய வேண்டும் என மலையப்ப நகரைச் சோ்ந்த மக்கள் கோரிவந்த நிலையில், செவ்வாய்க்கிழமை திடீரென சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.
புதுக்கோட்டை- மதுரை சாலையில் காலிக்குடங்களுடன் அவா்கள் அமா்ந்ததால், சுமாா் ஒரு மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மாநகராட்சி அலுவலா்களும் திருக்கோகா்ணம் போலீஸாரும் பேச்சுவாா்த்தை நடத்தி அனைவரையும் கலைந்துபோகச் செய்தனா்.