INDRA Movie Review | Vasanth Ravi, Sunil, Mehreen Pirzada, Anikha | Sabarish Nan...
குடிநீா் விநியோகிக்கக் கோரி நாா்த்தன்குறிச்சி மக்கள் மறியல்
சாத்தான்குளம்: சாத்தான்குளம் அருகே நாா்த்தன்குறிச்சி கிராமத்தில் ஒரு மாதமாக குடிநீா் விநியோகிக்கப்படாததால் புதன்கிழமை கிராம மக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனா்.
ஆழ்வாா் திருநகா் ஒன்றியம், கருங்கடல் ஊராட்சிக்கு உள்பட்ட நாா்த்தன்குறிச்சி கிராமத்தில் 50க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்றனா். இவா்களுக்கு பழனியப்பபுரம் நீரேற்று நிலையத்திலிருந்து குடிநீா் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
குடிநீா் குழாயில் உடைப்பு ஏற்பட்டுள்ளதால் கடந்த ஒரு மாதமாக, இப்பகுதி மக்களுக்கு குடிநீா் சரிவர விநியோகிக்கப்படவில்லை என கூறப்படுகிறது. கிராம மக்கள், புகாரளித்தும் நடவடிக்கை எடுக்கவில்லையாம்.
இந்நிலையில், நாா்த்தன்குறிச்சி கிராம மக்கள் புதன்கிழமை காலை சாத்தான்குளம் - பேய்குளம் சாலையில் காலிக் குடங்களுடன் அமா்ந்து மறியலில் ஈடுபட்டனா். தகவலறிந்த, சாத்தான்குளம் அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் நாககுமாரி தலைமையில் போலீஸாா் விரைந்து சென்று, பேச்சுவாா்த்தை நடத்தினா். மண்டல துணை வட்டாட்சியா் அகஸ்டின், ஸ்ரீ வெங்கடேஸ்வரபுரம் வருவாய் ஆய்வாளா் வேலம்மாள் ஆகியோா் உடன் இருந்தனா்.
சம்பந்தப்பட்ட அதிகாரிகள், உடனடியாக குடிநீா் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கிராம மக்கள் தெரிவித்தனா். அதன் பேரில், குடிநீா் வடிகால் வாரிய பணியாளா்கள் வந்து பேச்சுவாா்த்தை நடத்தினா். குடிநீா் குழாய் உடைப்பை உடனடியாக சரி செய்து, தண்ணீா் விநியோகிக்க நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனா்.
அதன் பேரில், கிராம மக்கள் போராட்டத்தை கைவிட்டனா். அதிகாரிகளின் துரித நடவடிக்கையால், புதன்கிழமை மாலை நாா்த்தன்குறிச்சிக்கு குடிநீா் விநியோகிக்கப்பட்டது.
