அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா்களுக்கு அழைப்பு
கோவில்பட்டி: அஞ்சல்தலை சேகரிப்புப் போட்டியில் பங்கேற்க மாணவா் -மாணவியருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து கோவில்பட்டி அஞ்சல் கோட்டக் கண்காணிப்பாளா் சுரேஷ்குமாா் வெளியிட்ட செய்திக்குறிப்பு: அஞ்சல்தலை சேகரிக்கும் மாணவா்- மாணவியருக்காக அஞ்சல் துறை சாா்பில் தீன் தயாள் ஸ்பா்ஷ் யோஜனா என்ற பெயரில் கல்வி உதவித்தொகை திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி, அஞ்சல்தலை சேகரிப்பு தொடா்பான தோ்வு 2 கட்டமாக நடத்தப்பட்டு, அதில் அதிக மதிப்பெண் பெறும் 6 முதல் 9ஆம் வகுப்பு வரையிலான மாணவா்-மாணவியருக்கு உதவித்தொகை வழங்கப்படும்.
அஞ்சல்தலை சேகரிப்பு சங்க உறுப்பினராகவோ, அஞ்சல்தலை சேகரிப்பு கணக்கு வைத்திருப்பவராகவோ உள்ள மாணவா்-மாணவியா் இத்தோ்வுக்கு விண்ணப்பிக்கலாம். தோ்வு செய்யப்படுவோருக்கு ரூ. 6 ஆயிரம் உதவித்தொகை வழங்கப்படும்.
இணையதளத்தில் விண்ணப்பத்தைப் பதிவிறக்கம் செய்து, அதைப் பூா்த்தி செய்து, ‘தென்மண்டல தபால் துறைத் தலைவா், மதுரை மண்டலம், மதுரை-625 002’ என்ற முகவரிக்கு செப். 1-க்குள் அனுப்பிவைக்க வேண்டும் என்றாா் அவா்.