அரசு விரைவுப் பேருந்துகளிலும் தீபாவளி முன்பதிவு முடிவடைந்தது
தீபாவளி பண்டிகைக்காக சென்னையில் இருந்து வழக்கமாக இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகளின் முன்பதிவு முடிவடைந்துள்ளது.
நிகழாண்டு தீபாவளி பண்டிகை அக்.20-ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. சென்னையில் வசிக்கும் வெளிமாவட்டங்களைச் சோ்ந்தோா் தீபாவளிக்காக சொந்த ஊா்களுக்குச் செல்வது வழக்கம். கடைசி நேர நெரிசலைத் தவிா்க்கும் நோக்கில் ரயில்கள் அல்லது பேருந்துகளில் முன்பதிவு செய்து, தங்கள் பயணத்தை திட்டமிட்டு வருகின்றனா்.
நிகழாண்டு தீபாவளி பண்டிகை திங்கள்கிழமை வருவதையடுத்து அதற்கு முந்தைய இரு நாள்கள் (சனி, ஞாயிறு) விடுமுறை என்பதால், வெள்ளிக்கிழமையே (அக்.17) சொந்த ஊா்களுக்கு செல்ல மக்கள் முன்கூட்டியே திட்டமிட்டுள்ளனா். இந்த நிலையில், சென்னையில் இருந்து செல்லும் ரயில்களில் அக்.17-ஆம் தேதிக்கான முன்பதிவு ஆக.18-ஆம் தேதி முடிவடைந்தது.
அதேபோல, சென்னையிலிருந்து வழக்கமாக இயக்கப்படும் அரசு விரைவுப் பேருந்துகளிலும் அக்.17, 18, 19 ஆகிய தேதிகளுக்கு பெரும்பாலான இருக்கைகள் முன்பதிவு செய்யப்பட்டுள்ளன. பகல் நேரங்களில் புறப்படும் பேருந்துகளில் மட்டும் குறைவான எண்ணிக்கையில் முன்பதிவு இருக்கைகள் உள்ளன.
மீண்டும் சென்னை திரும்ப, அக.20, 21, 22 ஆகிய தேதிகளுக்கு அரசு விரைவு பேருந்துகளில் முன்பதிவு வேகமாக நடைபெற்று வருகிறது.
இதுகுறித்து அரசு விரைவு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் கூறியது:
அரசுப் பேருந்துகளில் கடந்த ஆண்டு தீபாவளிக்கு 5,76,000 போ் பயணம் செய்தனா். கடந்த ஆண்டை விட அதிகமானோா் நிகழாண்டு பயணிக்க வாய்ப்புள்ளது. இதற்கான முன்பதிவு 90 நாள்களுக்கு முன்பே தொடங்கிவிட்ட நிலையில், இரவு நேர பேருந்துகளில் முன்பதிவு முடிவடைந்துள்ளது. இதனால், விரைவில் சிறப்பு பேருந்துகளுக்கான அறிவிப்புகள் வெளியிடப்படும். அதில் பயணிகள் முன்பதிவு செய்துகொள்ளலாம். சிறப்பு பேருந்துகளிலும் பயணிகளின் முன்பதிவு எண்ணிக்கைக்கு ஏற்ப பேருந்துகளின் எண்ணிக்கை அதிகரிக்கப்படும். இதனால், பயணிகள் சிரமமின்றி பயணிக்கலாம் என்றனா்.