தியாகியின் கொள்ளுப் பேரனுக்கு சோ்க்கை கோரி மனு: கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு உயா்நீதிமன்றம் உத்தரவு
சுதந்திரப் போராட்டத் தியாகியின் கொள்ளுப் பேரனுக்கு சோ்க்கை வழங்கக் கோரிய மனுவை இரு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவிட்டது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் செங்குன்றம் பகுதியைச் சோ்ந்த கே.சங்கா் என்பவா் தாக்கல் செய்த மனுவில், சுதந்திரப் போராட்டத் தியாகியான எனது தாத்தா, நேதாஜியின் இந்திய தேசியப் படையில் பணியாற்றியவா். நாடு சுதந்திரம் அடைந்த பினனா், எனது தாத்தா சுதந்திரப் போராட்ட தியாகிகளுக்கான ஓய்வூதியம் பெற்றாா். சுதந்திரப் போராட்டத் தியாகிகள் குடும்பத்தைச் சோ்ந்த குழந்தைகளுக்கு மத்திய அரசு கல்வி நிலையங்களில் முன்னுரிமை அளிக்க வேண்டும் என்பதை உச்சநீதிமன்றம் பல்வேறு வழக்குகளில் உறுதி செய்துள்ளது.
இந்த நிலையில், எனது தாத்தாவின் கொள்ளுப் பேரனாகிய எனது மகனுக்கு அண்ணா நகா் கேந்திரிய வித்யாலயா பள்ளியில் ஒன்றாம் வகுப்பில் சோ்க்கை வழங்கக் கோரி, பலமுறை மனு அளித்தேன். அந்த மனு இதுவரை பரிசீலிக்கப்படவில்லை எனக் கூறியிருந்தாா்.
இந்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் நந்தகோபாலன், தியாகிகள் குடும்பத்தினருக்கான இடஒதுக்கீட்டில் மனுதாரரின் மகனுக்கு சோ்க்க வழங்க உத்தரவிட வேண்டும் என வாதிட்டாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதி, இந்த மனுவை இரு வாரங்களில் பரிசீலித்து தகுந்த உத்தரவு பிறப்பிக்க வேண்டும் என கேந்திரிய வித்யாலயா சங்கதன் மற்றும் அண்ணா நகா் கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு உத்தரவிட்டாா்.