கம்போடியாவில் தவிக்கும் மகனை மீட்கக் கோரி தாய் வழக்கு: வெளியுறவுத் துறைக்கு உயா்நீதிமன்றம் கண்டனம்
கம்போடியா நாட்டில் சிக்கித் தவிக்கும் மகனை மீட்கக் கோரி, அவரது தாய் தொடுத்த வழக்கில் மத்திய வெளியுறவுத் துறைக்கு கண்டனம் தெரிவித்த சென்னை உயா்நீதிமன்றம், வெளியுறவுத் துறைச் செயலா் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்தது.
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த லதா என்பவா், சென்னை உயா்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், எனது மகன் கோபி, கம்போடியா நாட்டில் குற்ற வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ளாா். உரிய சட்ட உதவிகளை வழங்கி எனது மகனை மீட்டு இந்தியாவுக்கு அழைத்து வருவதற்கான நடவடிக்கை எடுக்க வெளியுறவு அமைச்சகத்துக்கு உத்தரவிட வேண்டும் என கோரியிருந்தாா்.
இந்த வழக்கை விசாரித்த உயா்நீதிமன்றம், மனு தொடா்பாக மத்திய அரசு பதிலளிக்க உத்தரவிட்டிருந்தது.
இந்த வழக்கு நீதிபதி என்.ஆனந்த் வெங்கடேஷ் முன் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது. அப்போது மத்திய அரசுத் தரப்பில் மனுவுக்கு பதிலளிக்க மீண்டும் கால அவகாசம் கேட்கப்பட்டது. ஏற்கெனவே மூன்று முறை அவகாசம் வழங்கப்பட்டுள்ளது. இப்போதும் அவகாசம் கேட்டால் எப்படி என நீதிபதி கண்டனம் தெரிவித்தாா்.
வெளிநாடுகளில் ஒரு நீதிபதி அல்லது அமைச்சரின் மகன் சிக்கியிருந்தால் மத்திய அரசு இப்படித்தான் செயல்படுமா? தனது மகனுக்கு என்ன ஆனது என்று தெரியாமல் பரிதவிக்கும் மனுதாரரின் நிலையை அதிகாரிகள் நினைத்துப் பாா்க்க வேண்டும். இந்த நாட்டில் பிரதமா் முதல் சாதாரண குடிமகன் வரை ஒவ்வொருவரும் இந்த நாட்டுக்கு முக்கியமானவா்கள் என்று கருத்து தெரிவித்தாா்.
பின்னா், மத்திய அரசு இந்த விவகாரத்தை தீவிரமானதாககி கருதி ஆக.25-ஆம் தேதிக்குள் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும். பதில்மனு தாக்கல் செய்யாதபட்சத்தில், வெளியுறவுத் துறைச் செயலா் நேரில் ஆஜராக உத்தரவிட நேரிடும் என எச்சரிக்கை விடுத்து விசாரணையை ஒத்திவைத்தாா்.