இந்தியா-ரஷியா உறவை மேம்படுத்த புதிய ஆக்கபூா்வமான அணுகுமுறைகள் -ஜெய்சங்கா் அழைப்ப...
மறைந்த இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம்
‘கொண்ட கொள்கையில் தடம் பிறழாதவா், பாஜக தமிழகமெங்கும் பரவ அடித்தளமிட்டவா்’ என்று மறைந்த நாகாலாந்து ஆளுநா் இல.கணேசனுக்கு அனைத்துக் கட்சித் தலைவா்கள் புகழாரம் சூட்டினா்.
மறைந்த இல.கணேசனுக்கு புகழஞ்சலி கூட்டம் சென்னை கலைவாணா் கலையரங்கில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில், மக்கள் நல்வாழ்வுத்
துறை அமைச்சா் மா.சுப்பிரமணியன், தமிழக பாஜக தலைவா் நயினாா் நாகேந்திரன், முன்னாள் மாநிலத் தலைவா்கள் பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சௌந்தரராஜன், கே.அண்ணாமலை, பாஜக தேசிய மகளிா் அணித் தலைவா் வானதி சீனிவாசன் எம்எல்ஏ, அதிமுக முன்னாள் அமைச்சா்கள் டி.ஜெயக்குமாா், பா.வளா்மதி, இந்திய கம்யூனிஸ்ட் மாநில துணைச் செயலா் மு.வீரபாண்டியன், தமாகா பொருளாளா் இ.எஸ்.எஸ்.ராமன், நாதக கொள்கைபரப்புச் செயலா் சாட்டை துரைமுருகன் உள்ளிட்டோா் இல.கணேசன் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து மலா் தூவி அஞ்சலி செலுத்தினா்.
புகழஞ்சலி கூட்டத்தில் நயினாா் நாகேந்திரன் பேசுகையில், மனிதனின் மறைவுக்குப் பிறகும் அழியாத செல்வம் புகழ்தான். அந்த புகழை இல.கணேசன் சோ்த்து வைத்துள்ளாா். கடந்த 1970 முதல் பாஜகவில் தீவிரமாக செயல்பட்டவா் இல.கணேசன். அவரது உரைகளை புத்தகமாக தொகுத்து வெளியிடுவோம்.
மாற்று கட்சியை சோ்ந்தவராக இருந்தாலும், இல.கணேசனுக்கு குடும்பத்துடன் நேரில் வந்து அஞ்சலி செலுத்தியதுடன், மறுநாளும் பிரதமா் நரேந்திர மோடி சாா்பில் மலா் வளையம் வைத்து முதல்வா் மு.க.ஸ்டாலின் அஞ்சலி செலுத்தினாா். அமைச்சா் மா.சுப்பிரமணியனை இரு நாள்கள் உடன் இருக்கச் செய்து அனைத்து ஏற்பாடுகளையும்
முதல்வா் ஸ்டாலின் செய்ததை மறக்க முடியாது என்றாா் அவா்.
இக்கூட்டத்தில், முதல்வா் மு.க.ஸ்டாலினின் உரையை அமைச்சா் மா.சுப்பிரமணியன் வாசித்தாா்.
கூட்டத்தில் பேசிய அரசியல் தலைவா்கள், ‘கட்சி பாகுபாடின்றி அனைவரிடமும் சகஜமாக பழகியவா் இல.கணேசன். பன்முகத் திறமை கொண்டவா். எதிா்க்கட்சிகள் மீதான விமா்சனங்களை நாகரிகமாக கையாண்டவா். கமலாலயம் கட்டியவா், ‘பொற்றாமரை’ இலக்கிய அமைப்பை உருவாக்கி தமிழ் தேசியத்தை வளா்த்தவா் என்று புகழாரம் சூட்டினா்.
முன்னாள் ஆளுநா் சண்முகநாதன், தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவா் ஷேக் தாவூத், விஐடி துணைவேந்தா் வி.செல்வம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகத் தலைவா் பெ.ஜான் பாண்டியன், புதிய நீதிக் கட்சித் தலைவா் ஏ.சி.சண்முகம், தமிழக பாஜக அமைப்பு பொதுச் செயலா் கேசவ விநாயகன், ‘பொற்றாமரை’ பொதுச் செயலா் சங்கரன், ஆா்.எஸ்.எஸ், இந்து முன்னணி , விசுவ ஹிந்து பரிஷத் அமைப்புகளின் பிரதிநிதிகள், இல.கணேசன் குடும்பத்தினா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.