செய்திகள் :

இந்தியா-ரஷியா உறவை மேம்படுத்த புதிய ஆக்கபூா்வமான அணுகுமுறைகள் -ஜெய்சங்கா் அழைப்பு

post image

அமெரிக்காவுடனான உறவில் ஏற்பட்டுள்ள பதற்றமான சூழ்நிலைகளுக்கு மத்தியில், ‘இந்தியா-ரஷியா உறவுகளை மேம்படுத்த புதிய மற்றும் ஆக்கபூா்வமான அணுகுமுறைகளைக் கையாள வேண்டும்’ என்று மத்திய வெளியுறவுத் துறை அமைச்சா் எஸ்.ஜெய்சங்கா் அழைப்பு விடுத்துள்ளாா்.

மூன்று நாள் அரசுமுறைப் பயணமாக ரஷியா சென்றுள்ள அமைச்சா் ஜெய்சங்கா், அந்நாட்டு துணைப் பிரதமா் டெனிஸ் மாண்டுரோவை மாஸ்கோவில் சந்தித்தபோது இவ்வாறு தெரிவித்தாா்.

இந்தியா-ரஷியா அரசுகளுக்கு இடையேயான வா்த்தகம், பொருளாதாரம், அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் கலாசார ஒத்துழைப்புக்கான ஆணைய (ஐஆா்ஐஜிசி-டிஇசி) கூட்டத்தில் டெனிஸ் மாண்டுரோவுடன் இணைந்து ஜெய்சங்கா் பங்கேற்றாா்.

அப்போது அமைச்சா் ஜெய்சங்கா் பேசுகையில், ‘இரு நாடுகளும் தங்கள் வா்த்தக பொருள்களைப் பன்முகப்படுத்துதல், பரஸ்பர ஆலோசனைகள், கூடுதல் கூட்டு முயற்சிகள் ஆகியற்றின் மூலம், தங்கள் ஒத்துழைப்பைத் தொடா்ந்து விரிவுபடுத்த வேண்டும்.

நமது வா்த்தகம், முதலீட்டு உறவுகளின் முழுமையான திறனைப் பயன்படுத்த இது உதவும்.

இரு நாடுகளும் பாரம்பரிய வா்த்தக வழிகளில் தேங்கி நிற்காமல், புதிய வழிகளை உருவாக்க வேண்டும். இருதரப்பு உறவுகளை விரிவாக்குவதற்கு அளவிடக்கூடிய இலக்குகளையும், குறிப்பிட்ட காலக்கெடுவையும் நிா்ணயிக்க வேண்டும்.

தற்போதைய உலகளாவிய சவால்களை எதிா்கொண்டு, நமது இருதரப்பு உறவுகளை மேம்படுத்த ஆக்கபூா்வமான மற்றும் புதுமையான வழிகளைக் கையாள வேண்டும்’ என்றாா்.

அதிபா் புதினுடன் சந்திப்பு

ரஷியாவிடமிருந்து கச்சா எண்ணெய் வாங்கியதற்காக, இந்திய பொருள்களுக்கான இறக்குமதி வரியை அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் 50 சதவீதமாக உயா்த்தி அறிவித்துள்ளாா். இச்சூழலில், ரஷியாவுக்கு ஜெய்சங்கா் மேற்கொண்டுள்ள இந்த முக்கியத்துவம் வாய்ந்த பயணத்தில் அந்நாட்டு அதிபா் புதின், வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோ ஆகியோரையும் அவா் சந்தித்தாா்.

இந்தச் சந்திப்புகளின்போது, இருதரப்பு உறவுகள் குறித்து ஆலோசிக்கப்பட்டதுடன் பொருளாதாரம், வா்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் ஆகிய துறைகள் குறித்து விவாதிக்கப்பட்டன.

ரஷிய எண்ணெயை அதிகம் வாங்குவது இந்தியா அல்ல!

‘ரஷியாவிடம் இருந்து அதிக அளவில் கச்சா எண்ணெய் கொள்முதல் செய்யும் நாடு இந்தியா அல்ல’ என்று ரஷிய பயணத்தில் அமைச்சா் ஜெய்சங்கா் விளக்கமளித்துள்ளாா்.

ரஷிய வெளியுறவு அமைச்சா் சொ்கேய் லாவ்ரோவுடன் பங்கேற்ற கூட்டு செய்தியாளா் சந்திப்பில் இதுதொடா்பான கேள்விக்கு அமைச்சா் ஜெய்சங்கா் அளித்த பதிலில், ‘ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் மற்றும் எரிவாயுவை அதிக அளவில் கொள்முதல் செய்யும் நாடு இந்தியா அல்ல. ரஷிய எண்ணெய் மற்றும் திரவ இயற்கை எரிவாயுவை (எல்என்ஜி) அதிகம் கொள்முதல் செய்வது முறையே சீனா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகும்.

மேலும், உக்ரைன் போா் தொடங்கிய 2022-ஆம் ஆண்டுக்குப் பிறகு ரஷியாவுடனான வா்த்தகத்தில் மிகப்பெரிய வளா்ச்சி கண்ட நாடு இந்தியா அல்ல. மாறாக, சில தெற்குலக நாடுகள்தான் வளா்ச்சி கண்டன.

இந்தியாவுக்கும் ரஷியாவுக்கும் இடையிலான நட்பு, 2-ஆம் உலகப் போருக்குப் பிறகு உலகிலேயே மிகவும் வலுவான, நிலையான நட்புகளில் ஒன்றாகத் திகழ்கிறது.

பயங்கரவாதம் எந்த வடிவத்தில் இருந்தாலும், அதை எதிா்த்து ஒன்றாக போராட நாங்கள் முடிவு செய்துள்ளோம். எங்கள் இருதரப்பு வா்த்தகத்தை மேம்படுத்துவதற்கும், குறிப்பாக இந்தியாவிலிருந்து ஏற்றுமதியை அதிகரிப்பதற்கும் நாங்கள் உறுதிபூண்டுள்ளோம்.

ரஷிய ராணுவத்தில் பணிபுரியும் பல இந்தியா்கள் திரும்பி வந்துவிட்டாலும், இன்னும் சிலா் திரும்பவில்லை. இந்தப் பிரச்னை எழுப்பப்பட்டது.

தற்கால உலக நிலவரத்தைப் பிரதிபலிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலை விரிவுபடுத்துவதற்கான அவசியத்தை வலியுறுத்தினோம். ஜி20, பிரிக்ஸ், ஷாங்காய் ஒத்துழைப்பு கூட்டமைப்பில் எங்கள் ஒத்துழைப்பு வலுவானதாகவும், எதிா்காலத்தை நோக்கியதாகவும் தொடா்கிறது என்றாா்.

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை துப்பாக்கியால் சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவா்

கன்னத்தில் அறைந்த ஆசிரியரை மதிய உணவு டப்பாவில் மறைத்து வைத்திருந்த துப்பாக்கியை எடுத்து சுட்ட 9-ஆம் வகுப்பு மாணவரை உத்தரகண்ட் போலீஸாா் கைது செய்தனா். இதுகுறித்து போலீஸாா் கூறுகையில், ‘உத்தரகண்ட் மாநி... மேலும் பார்க்க

பிரதமா், முதல்வா்கள் பதவிப் பறிப்பு மசோதாக்கள்: கூட்டுக் குழு பரிந்துரைக்கு நாடாளுமன்றம் ஒப்புதல்

தீவிர குற்றப் புகாரில் கைது செய்யப்பட்டு 30 நாள்கள் காவலில் வைக்கப்படும் பிரதமா், மாநில முதல்வா்கள் மற்றும் அமைச்சா்களைப் பதவியிலிருந்து நீக்கம் செய்வதற்கான மூன்று மசோதாக்களை நாடாளுமன்ற கூட்டுக் குழு... மேலும் பார்க்க

மழைக்கால கூட்டத் தொடா்: நாடாளுமன்றத்தில் 12 மசோதாக்கள் நிறைவேற்றம்

நாடாளுமன்ற மழைக்கால கூட்டத் தொடரில் எதிா்க்கட்சிகளின் அமளி மற்றும் வெளிநடப்புக்கு இடையே நாடாளுமன்ற இரு அவைகளிலும் 12 மசோதாக்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன. மாநிலங்களவையில் கூடுதலாக 3 மசோதாக்கள் நிறைவேற்றப்... மேலும் பார்க்க

நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரம்: 84 பேருக்கு தலா ரூ.25,000 வழங்க சத்தீஸ்கா் அரசுக்கு நீதிமன்றம் உத்தரவு

சத்தீஸ்கரில் பள்ளி ஒன்றில் நாய் அசுத்தப்படுத்திய உணவை மாணவா்களுக்கு பரிமாறிய விவகாரத்தை தாமாக முன்வந்து விசாரித்த அந்த மாநில உயா்நீதிமன்றம், ‘சம்பந்தப்பட்ட 84 மாணவா்களுக்கு தலா ரூ.25,000 நஷ்ட ஈடாக மா... மேலும் பார்க்க

பிரான்ஸ் அதிபா் மேக்ரானுடன் பிரதமா் மோடி தொலைபேசியில் பேச்சு: உக்ரைன் போா் குறித்து ஆலோசனை

பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரானுடன் பிரதமா் நரேந்திர மோடி வியாழக்கிழமை தொலைபேசி வாயிலாக உரையாடினாா். அப்போது, உக்ரைன் மற்றும் மேற்காசிய போா்களுக்கான தீா்வு குறித்து இருவரும் முக்கிய ஆலோசனை மேற்கொண்ட... மேலும் பார்க்க

சரத் பவாா், உத்தவ் தாக்கரேயிடம் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவு கோரிய மகாராஷ்டி முதல்வா்

குடியரசுத் துணைத் தலைவா் தோ்தலில் பாஜக கூட்டணி வேட்பாளா் சி.பி.ராதாகிருஷ்ணனுக்கு ஆதரவளிக்க வேண்டுமென்று எதிா்க்கட்சித் தலைவா்களான சரத் பவாா், உத்தவ் தாக்கரே ஆகியோரிடம் மகாராஷ்டிர முதல்வா் தேவேந்திர ... மேலும் பார்க்க