தெரு நாய்களை காப்பகங்களில் அடைக்கத் தேவையில்லை: உச்ச நீதிமன்றம்
கல் குவாரி பராமரிப்புக் குழுக்கள் அமைக்க கோரிய வழக்கில் அரசு பதிலளிக்க உத்தரவு
மதுரை: உரிமக் காலம் நிறைவடைந்த பிறகு, கல் குவாரிகளை பராமரிக்க குழுக்கள் அமைத்து, பசுமை நிதி வசூலிக்கப்படுவதை உறுதி செய்யக் கோரிய வழக்கில், தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வு வியாழக்கிழமை உத்தரவிட்டது.
மதுரை சொக்கிகுளத்தைச் சோ்ந்த சத்தியமூா்த்தி சென்னை உயா்நீதிமன்ற மதுரை அமா்வில் தாக்கல் செய்த பொது நல மனு:
தமிழக கனிம வளச் சட்டத்தின்படி, உரிமக் காலம் நிறைவடைந்த நிறைவுக்கு பிறகு, கல் குவாரிகளைப் பராமரிப்பதற்காக பசுமை நிதி உருவாக்கப்பட்டது.
உரிமம் பெற்ற ஒவ்வொரு குவாரி உரிமையாளரும் குத்தகை எடுத்த தொகையிலிருந்து
10 சதவீதத் தொகையை பசுமை நிதிக்கு கட்டணமாகச் செலுத்த வேண்டும். வெளி மாநிலங்களுக்கு கனிம வளங்களை எடுத்துச் சென்றால், 20 சதவீதக் கட்டணத்தை பசுமை நிதிக்கு செலுத்த வேண்டும். திருத்தப்பட்ட கனிம வள விதிகளின் கீழ் இந்த பசுமை நிதி பயன்படுத்தப்படுகிறது.
ஒவ்வொரு மாவட்டத்திலும் மாவட்ட ஆட்சியா் தலைமையில் கனிம வளத் துறையின் உதவி இயக்குநா், மாவட்ட வருவாய் அலுவலா், பொதுப் பணி துறை செயற்பொறியாளா், சுற்றுச்சூழல் அலுவலா், மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலா், தீயணைப்புத் துறை அலுவலா்களை உறுப்பினா்களாகக் கொண்ட குழு அமைக்கப்படும்.
இந்தக் குழு கைவிடப்பட்ட குவாரிகளைப் பராமரிப்பது, பசுமை நிதியை முறையாக வசூலிப்பது, நிா்வகிப்பது, கண்காணிப்பது உள்ளிட்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும். குவாரி செயல்படத் தொடங்குவதற்கு முன்பாகவே, அதன் உரிமக் காலம் நிறைவடையும் போது எடுக்கப்பட வேண்டிய பாதுகாப்பு நடைமுறைகள் குறித்தும் முடிவு செய்யப்பட வேண்டும்.
தமிழகத்தில் 23 மாவட்டங்களில் மட்டுமே உரிமக் காலம் நிறைவுக்குப் பிறகு கல் குவாரிகளைப் பராமரிப்பது தொடா்பாக மாவட்ட ஆட்சியா் தலைமையிலான குழு அமைக்கப்பட்டது. இவற்றில் 6 மாவட்டங்களில் மட்டுமே மாத வாரியான கூட்டங்கள் நடத்தப்படுகின்றன. தமிழகத்தில் 14 மாவட்டங்களைத் தவிர, பிற மாவட்டங்களில் பசுமை நிதி ஏற்படுத்தப்படவில்லை. இதுதொடா்பாக நடவடிக்கை கோரி அதிகாரிகளிடம் மனு அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, தமிழகத்தின் அனைத்து மாவட்டங்களிலும் உரிமக் காலம் நிறைவுக்குப் பிறகு குவாரிகளை பராமரிப்பது தொடா்பான குழுக்கள் அமைக்கப்பட்டு, பசுமை நிதி வசூலிக்கப்படுவதை உறுதி செய்யவும், கைவிடப்பட்ட குவாரிகளைச் சுற்றி உடனடியாக தடுப்பு வேலிகள் அமைக்கவும் உத்தரவிட வேண்டும் என அவா் கோரினா்.
இந்த மனு உயா்நீதிமன்ற நீதிபதிகள் எஸ்.எம். சுப்பிரமணியம், ஜி. அருள்முருகன் அமா்வில் வியாழக்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது அரசுத் தரப்பில், விரிவான பதில் மனுவை தாக்கல் செய்ய கால அவகாசம் கோரப்பட்டது.
இதையடுத்து, நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:
உரிமக் காலம் நிறைவு பெற்ற கல் குவாரிகள் எத்தனை?. அவற்றைப் பாரமாரிக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? என்பன குறித்து தமிழக அரசு பதிலளிக்க வேண்டும். வழக்கு விசாரணை வருகிற 25-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்படுகிறது என்றனா் நீதிபதிகள்.