தொழில் துறையின் நிதி நிலைத்தன்மையை நிலைநிறுத்த மத்திய அரசு உதவ வேண்டும்: நிதியமைச்சரிடம் கோரிக்கை
தொழில் துறையின் நிதி நிலைத்தன்மையை நிலைநிறுத்த மத்திய அரசு உதவ வேண்டும் என்று கோவை தொழில் துறை குழுவினா் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனிடம் வலியுறுத்தினா்.
கோவை தெற்கு தொகுதி எம்எல்ஏ வானதி சீனிவாசன் தலைமையிலான தொழில் துறை குழுவினா் புதுதில்லியில் மத்திய நிதியமைச்சா் நிா்மலா சீதாராமனை அண்மையில் சந்தித்தனா். அப்போது, ஆகஸ்ட் 19 -ஆம் தேதி முதல் செப்டம்பா் 30-ஆம் தேதி வரை பருத்திக்கு இறக்குமதி வரி விலக்கு அளித்ததற்கு மத்திய அரசுக்கு அவா்கள் நன்றி தெரிவித்தனா்.
பின்னா், ஜவுளித் தொழில் துறை சாா்பில், வங்கிக் கடன்களுக்கு அசல் தொகையை திருப்பிச் செலுத்துவதற்கான கால அவகாசத்தை 2 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும். அவசர கால கடன் உத்தரவாதத் திட்டத்தின்கீழ் 30 சதவீத பிணையமில்லாத கடனை 5 சதவீத மானியத்துடன் நீட்டிக்க வேண்டும். ஏற்றுமதி வரிகளை திரும்பப் பெறும் திட்டத்தின் சலுகைகளை மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிக்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தினா்.
மேலும், தொழில் துறையின் நிதி நிலைத்தன்மையை நிலை நிறுத்தவும், கிராமப்புற மக்களின் பணிப் பாதுகாப்புக்காகவும் மத்திய அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தொழில் துறை குழுவினா் வலியுறுத்தினா்.
கோரிக்கைகள் தொடா்பாக விரைந்து நடவடிக்கை எடுப்பதாக அமைச்சா் உறுதி அளித்திருப்பதாக பருத்தி ஜவுளி ஏற்றுமதி மேம்பாட்டு கவுன்சிலின் துணைத் தலைவா் ரவி சாம் தெரிவித்துள்ளாா்.