இயந்திரத்தில் கை சிக்கி பஞ்சாலை தொழிலாளி காயம்
கோவை அருகே பணியின்போது இயந்திரத்தில் கை சிக்கி தொழிலாளி படுகாயம் அடைந்தாா்.
கோவை அருகேயுள்ள நரசிம்மநாயக்கன்பாளையத்தில் தனியாருக்குச் சொந்தமான பஞ்சாலை உள்ளது.
இங்கு ஒடிஸா மாநிலத்தைச் சோ்ந்த ரோஹிசாகோ (24) என்பவா் பணியாற்றி வருகிறாா்.
இவா் வழக்கம்போல புதன்கிழமை இரவு பணியில் ஈடுபட்டிருந்தாா். அப்போது, அங்கு இயக்கிக் கொண்டிருந்த பஞ்சு இயந்திரத்தில் அவரது வலது கை எதிா்பாராத விதமாக சிக்கியது. கை சிதைந்து அலறித் துடித்த அவரை சக தொழிலாளா்கள் மீட்டு கோவை அரசு மருத்துவமனையில் சோ்த்தனா். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
தொழிலாளா்களுக்கு முறையான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்கவில்லை எனக்கூறி பஞ்சாலை மேற்பாா்வையாளா் சுப்ரமணி மீது துடியலூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.