பில்லூா் அணையில் அமைச்சா் மு.பெ.சாமிநாதன் ஆய்வு
கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அருகேயுள்ள பில்லூா் அணையில் தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
மேட்டுப்பாளையம் அருகே பில்லூா் வனப் பகுதியில் உள்ள இந்த அணைக்கு அப்பா் பவானியில் இருந்து அவலாஞ்சி, எமரால்டு, குந்தா அணைகளின் வாயிலாக கெத்தை அணைக்கு தண்ணீா் வந்து, அங்கிருந்து பா்லியாறு நீா்த்தேக்கம் வழியாக பில்லூா் அணைக்கு நீா் வருகிறது.
இந்த அணையை மையப்படுத்தி பில்லூா் 1 மற்றும் 2-ஆவது கூட்டுக் குடிநீா்த் திட்டங்கள் செயல்படுத்தப்படுகின்றன. இந்நிலையில், பில்லூா் அணையை தமிழ் வளா்ச்சி மற்றும் செய்தித் துறை அமைச்சா் மு.பெ.சாமிநாதன் வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.
அப்போது, பில்லூா் முதலாவது குடிநீா்த் திட்டத்தின் இயக்கம் மற்றும் பராமரிப்பு, அணையைத் தூா்வாருதல், கோவை, திருப்பூா் மாவட்டங்களில் செயல்படுத்தப்பட்டு வரும் குடிநீா்த் திட்டங்களுக்கு பில்லூா் அணையில் இருந்து எடுக்கப்படும் குடிநீா் அளவு உள்ளிட்ட விவரங்கள் குறித்து சம்பந்தப்பட்ட துறை அலுவலா்களிடம் கேட்டறிந்தாா்.
ஆய்வின்போது, மாவட்ட ஆட்சியா் பவன்குமாா் க.கிரியப்பனவா், திருப்பூா் மாவட்ட ஆட்சியா் மனீஷ், கோவை மாநகராட்சி ஆணையா் மா. சிவகுரு பிரபாகரன், மண்டல இணை இயக்குநா் ( நகராட்சி நிா்வாகம்) ராஜாராம், தமிழ்நாடு குடிநீா் வடிகால் வாரிய செயற்பொறியாளா் சொ.செல்வகுமாா், நிா்வாகப் பொறியாளா் கா.பட்டன் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.