குடியரசுத் தலைவரின் தேநீர் விருந்து அழைப்பிதழ்: தென் மாநிலங்களின் கலாசாரங்கள் பிரதிபலிப்பு!
நமது சிறப்பு நிருபர்
புது தில்லி: இந்த ஆண்டு குடியரசு தினத்தையொட்டி தனது மாளிகையில் குடியரசுத் தலைவர் அளிக்கவிருக்கும் 'அட் ஹோம்' எனப்படும் தேநீர் விருந்து வரவேற்புக்கு அழைக்கப்படுபவர்களுக்கு, இந்தியாவின் ஐந்து தென் மாநிலங்களின் கலை மற்றும் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் பொருள்கள் இடம்பெற்ற கைவினைப்பெட்டி அழைப்பிதழை (படம்) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு வழங்கியுள்ளார்.
ஆண்டுதோறும் குடியரசு தினத்தன்று மாலையில் குடியரசுத் தலைவர் மாளிகையில் பாரம்பரியமாக நடத்தப்படும் 'அட் ஹோம்' தேநீர் விருந்து வரவேற்பு நிகழ்ச்சி ஒரு தனித்துவமான கலாசார பாங்கைக் கொண்டிருக்கும்.
இந்த ஆண்டு தேநீர் விருந்துக்கு அழைக்கப்பட்டுள்ளவர்களுக்கு தமிழகம், கேரளம், கர்நாடகம், தெலங்கானா, ஆந்திர பிரதேசம் ஆகிய ஐந்து தென் மாநிலங்களின் வளமான பாரம்பரியத்தைப் பிரதிநிதித்துவப்படுத்தும் பொருள்கள் இடம்பெற்ற கைவினைப் பெட்டி வழங்கப்பட்டுள்ளது.
இந்த பொருள்கள், நிம்மலகுண்டா கைவினைஞர்களின் கலம்காரி ஓவியங்களால் அலங்கரிக்கப்பட்ட மூங்கில்}நெசவுப் பெட்டியில் அலங்கரிக்கப்பட்டு, அதனுள் அழைப்பிதழ் வைக்கப்பட்டுள்ளது. இது ஆந்திர மாநிலத்தைப் பிரதிபலிக்கிறது. மறுபயன்பாட்டுக்காக வடிவமைக்கப்பட்ட இகாட்} போச்சம்பள்ளி துணி உறை, தெலங்கானாவைப் பிரதிபலிக்கிறது.
இவற்றுடன் கர்நாடகத்தின் மைசூரு பாரம்பரிய கஞ்சிஃபா கலையை சித்தரிக்கும் குளிர்சாதன பெட்டியில் ஒட்டக்கூடிய காந்த ஓவியம், தமிழகத்தின் காஞ்சிபுரம் பட்டு நெசவுத் திறனை பறைசாற்றும் சிறு முடிச்சுப்பை. ஆந்திரத்தின் கலைநயம் மிக்க சிறு உருவ பொம்மைகள், கேரள கைவினைஞர்களால் 'திருகு' இலைகளைக் கொண்டு நெய்யப்பட்ட புக்மார்க் பக்கக்குறி அட்டை ஆகியவை கைவினை அழைப்பிதழ் பெட்டியில் உள்ளன.
இது குறித்து குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள் கூறுகையில், 'குடியரசுத் தலைவர் திரெüபதி முர்முவின் சிந்தனையில் உருவான இந்த முன்முயற்சி, நிலைத்தன்மை மற்றும் உள்ளூர் கைவினைத் திறனை ஊக்குவிக்கும் அதே வேளையில், இந்தியாவின் 5,000 ஆண்டுகள் பழைமையான நாகரிகத்தைக் கொண்டாடுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது' என்றனர்.
புவியியல் குறிச்சொல் கொண்ட இந்தப் பொருள்கள் அனைத்தும் நாட்டின் கலாசார பன்முகத்தன்மையைப் பிரதிபலிக்கின்றன. தேசிய வடிவமைப்பு நிறுவனத்துடன் (என்ஐடி) இணைந்து, குடியரசுத் தலைவர் மாளிகை அதிகாரிகள், தென்மாநில மாநில கைவினைஞர்களின் பங்களிப்புகளுடன் இந்த திட்டம்த்தை செயல்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிகழ்ச்சிக்காக நாடு முழுவதிலும் இருந்து பல்வேறு துறைகளில் சாதனை படைத்த இளம் சாதனையாளர்கள், 'ட்ரோன் தீதிஸ்' என அழைக்கப்படும் பெண் ட்ரோன் விமானிகள், மாற்றுத்திறனாளி சாதனையாளர்கள், இயற்கை விவசாய முன்னோடிகள் மற்றும் பல்வேறு பின்னணிகளைச் சேர்ந்த பிற சாதனையாளர்கள் அழைக்கப்பட்டுள்ளனர் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.
'அட் ஹோம்' வரவேற்பு என்றால் என்ன?
'அட் ஹோம்' வரவேற்பு என்பது நாட்டின் குடியரசு மற்றும் சுதந்திர தினங்களின்போது பங்கேற்கும் குடியரசு துணைத் தலைவர், பிரதமர், மக்களவைத் தலைவர், உச்சநீதிமன்றத் தலைமை நீதிபதி மற்றும் நீதிபதிகள், மத்திய அமைச்சர்கள், தில்லி துணைநிலை ஆளுநர், முதல்வர், நாடாளுமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட முக்கியத் தலைவர்கள், முப்படைகளின் தளபதிகள், காவல் படைகளின் தலைமை இயக்குநர்கள், முக்கிய விருந்தினர்கள் உள்ளிட்ட உயரதிகாரிகள் ஆகியோருக்கு குடியரசுத் தலைவர் தேநீர் விருந்து அளிப்பதைக் குறிக்கிறது. இது தவிர, பத்ம விருது பெற்றவர்கள், பல்துறை சாதனையாளர்கள் உள்ளிட்ட பலரை இந்நாள்களில் குடியரசுத் தலைவர் மற்றும் பிரபலங்கள் நேரில் பார்க்கவும் அவர்களுடன் கலந்துரையாடவும் இந்த நிகழ்ச்சி உதவுகிறது.