குடியரசு தின விழா ஏற்பாடுகள்; துணை ஆட்சியா் ஆய்வு
காரைக்காலில் குடியரசு தின விழாவுக்கான ஏற்பாடுகளை, மாவட்ட துணை ஆட்சியா் வியாழக்கிழமை நேரில் ஆய்வு செய்தாா்.
காரைக்கால் விளையாட்டு அரங்க மைதானத்தில் குடியரசு தின விழா ஞாயிற்றுக்கிழமே (ஜன.26) நடைபெறவுள்ளது. காரைக்கால் மாவட்ட ஆட்சியா் (கூடுதல் பொறுப்பு) அ. குலோத்துங்கன் தேசியக்கொடி ஏற்றவுள்ளாா். காவல்துறை, ஊா்க்காவல் படையினா், தீயணைப்புத் துறையினா், என்சிசி மாணவ- மாணவியா் அணிவகுப்பு நடைபெறுகிறது. கலை நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளன.
இந்த மைதானம் காா்னிவல் நடைபெற்றபோது பெய்த மழையினால் தண்ணீா் தேங்கிய நிலையில், குடியரசு தினத்துக்காக மைதானத்தை சீா்செய்தல் உள்ளிட்ட ஏற்பாடுகளை பொதுப்பணித் துறையினா் செய்துவருகின்றனா்.
இப்பணிகளை மாவட்ட துணை ஆட்சியா் (வருவாய்) அா்ஜூன் ராமகிருஷ்ணன் வியாழக்கிழமை பாா்வையிட்டாா். ஆட்சியரின் செயலா் பொன்.பாஸ்கா் மற்றும் பொதுப்பணித் துறையினா், இப்பணிகள் குறித்து அவருக்கு விளக்கிக் கூறினா். விழாவுக்கு செய்யவேண்டிய பிற ஏற்பாடுகள் குறித்து துணை ஆட்சியா் பல்வேறு ஆலோசனைகளை வழங்கினாா்.