குடியரசு துணைத் தலைவர் தேர்தல்: மாநிலங்களவை துணைத்தலைவர் வாக்களித்தார்!
இந்தியாவின் 15-வது துணை குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான வாக்களிப்பில் மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தனது வாக்கினைப் பதிவு செய்தார்.
நாட்டின் 14-ஆவது குடியரசு துணைத் தலைவரான ஜகதீப் தன்கா் ஜூலை 21-இல் தனது பதவியை ராஜிநாமா செய்தாா். 2027, ஆக.10-ஆம் தேதி ஜகதீப் தன்கரின் பதவிக்காலம் நிறைவடைய இருந்த நிலையில், உடல்நிலையைக் காரணம் காட்டி 2 ஆண்டுகளுக்கு முன்பாகவே தனது பதவியை ராஜிநாமா செய்தாா். இதையடுத்து 15-வது குடியரசு துணைத் தலைவர் தேர்ந்தெடுப்பதற்கான தேர்வு இன்று காலை முதல் தொடங்கி நடைபெற்று வருகின்றது.
தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் பிரதமர் மோடி முதலாவதாக வாக்களித்தார். அதைத் தொடர்ந்து எம்.பி.க்கள் வாக்களிக்கத் தொடங்கியுள்ளனர்.
முன்னாள் பிரதமரும், மாநிலங்களவையில் ஜேடி(எஸ்) எம்பியுமான எச்.டி. தேவகௌடா சக்கர நாற்காலியில் வந்து தனது வாக்கிளை பதிவு செய்தார்.
மத்திய அமைச்சர்கள் நிதின் கட்கரி, ஜெ.பி. நட்டா, அர்ஜுன் ராம் மேக்வால் மற்றும் பிரகலாத் ஜோஷி ஆகியோர் வாக்களித்தனர்.
குடியரசு துணைத் தலைவா் பதவிக்கான தேர்தலில், பாஜக தலைமையிலான ஆளும் தேசிய ஜனநாயகக் கூட்டணி சாா்பில் சி.பி. ராதாகிருஷ்ணனும் (67), எதிா்க்கட்சிகளின் ‘இந்தியா’ கூட்டணி சாா்பில் பி. சுதா்சன் ரெட்டியும் (79) போட்டியிடுகின்றனர்.
இந்த நிலையில், மாநிலங்களவை துணைத் தலைவர் ஹரிவன்ஷ் நாராயண் சிங் தனது வாக்கினைப் பதிவு செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.