குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானை
கோத்தகிரி அருகே உள்ள சோலூா் பிக்கைகண்டி கிராமத்தில் குடியிருப்பு பகுதியில் உலவும் காட்டு யானையால் மக்கள் அச்சமடைந்துள்ளனா்.
சமவெளிப் பகுதியில் வறட்சி காரணமாக அப்பகுதியில் இருந்த காட்டு யானைகள், குன்னூா், கோத்தகிரி போன்ற பகுதிகளுக்கு வந்து முகாமிட்டுள்ளன.
இந்நிலையில் கோத்தகிரி அருகேயுள்ள சோலூா் பிக்கைகண்டி குடியிருப்பு பகுதியில் கடந்த 4 நாள்களாக இரவு நேரத்தில் ஒற்றை காட்டு யானை நடமாடி வருகிறது. இந்த யானை இங்குள்ள விளை நிலங்களை சேதப்படுத்துவதால் கிராம மக்கள் அச்சமடைந்துள்ளனா். இந்த காட்டு யானையை அடா்ந்த வனப் பகுதிக்குள் விரட்ட வனத்துறை நடவடிக்கை எடுக்க வேண்டுமென இப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.