குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சட்டக் கல்லூரி மாணவன்: பெண் பலி!
கும்பமேளா: 45 நாள்களில் ரூ.30 கோடி; யோகி பாராட்டிய படகு உரிமையாளர் -`ரூ.12 கோடி' கட்ட ஐ.டி நோட்டீஸ்!
உத்தரப்பிரதேசத்தில் நடந்த கும்பமேளா 45 நாள்கள் விமரிசையாக நடந்து சிவராத்திரியோடு முடிவுக்கு வந்துள்ளது. இக்கும்பமேளா குறித்து முதல்வர் யோகி ஆதித்யநாத் சட்டமன்றத்தில் அளித்த பதிலில், ''கும்பமேளாவில் பிந்து மெஹ்ராவும், அவரது குடும்பத்தினரும் படகு ஓட்டி 45 நாள்களில் ரூ.30 கோடி சம்பாதித்து இருக்கின்றன. படகோட்டியின் குடும்பத்தில் மட்டும் 150 படகுகள் இருக்கிறது. ஒவ்வொரு படகும் 45 நாட்களில் தலா ரூ.23 லட்சம் சம்பாதித்து இருக்கிறது. அதாவது தினமும் 50 முதல் 52 ஆயிரம் வரை சம்பாதித்து இருக்கிறது. கும்பமேளாவிற்கு முன்பு ஒவ்வொரு படகும் 1000 ரூபாயில் இருந்து 2000 வரை மட்டுமே சம்பாதித்து வந்தன'' என்று குறிப்பிட்டு இருந்தார். இச்செய்தி சோசியல் மீடியாவில் வைரலானது. உடனே அதனை பார்த்த வருமான வரித்துறை சுதாரித்துக்கொண்டு மெஹ்ராவிற்கு ரூ.12.8 கோடி வருமான வரி செலுத்தும்படி கூறி நோட்டீஸ் அனுப்பி இருக்கிறது.

இந்த நோட்டீஸை பார்த்து அதிர்ச்சியடைந்துள்ள மெஹ்ரா என்ன செய்வது என்று தெரியாமல் திணறிக்கொண்டிருக்கிறார். ஒவ்வொரு படகும் தினமும் 50 ஆயிரம் சம்பாதித்து இருந்தாலும் படகு ஓட்டுபவர்கள் சம்பளம் மற்றும் அரசுக்கான கட்டணம் செலுத்தவேண்டும். அதனை கணக்கில் எடுக்காமல் நேரடியாக முதல்வர் யோகி ஆதித்யநாத்திடம் தனக்கு ரூ.30 கோடி வருமானம் கிடைத்தது என்று கூறி மெஹ்ரா சிக்கலில் மாட்டிக்கொண்டார். இந்த அளவுக்கு 45 நாள்களில் பணம் சம்பாதிப்போம் என்று அவர் நினைத்துப்பார்த்திருக்க மாட்டார். வருமான வரித்துறை சட்டம் 4 மற்றும் 68-வது சட்டப்பிரிவின் கீழ் இந்த நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.
இது குறித்து வருமான வரி ஆலோசகர் மந்தன் தனது சோசியல் மீடியா பக்கத்தில் வெளியிட்டுள்ள செய்தியில், ''படகோட்டியின் குடும்பம் வழக்கமான நாள்களில் மாதம் 15000 சம்பாதிப்பதே கடினம். கும்பமேளாவில் அதிகப்படியான கூட்டம் வந்ததால் நாள் முழுவதும் கஷ்டப்பட்டு ரூ.30 கோடியை சம்பாதித்து இருக்கிறார். இந்தியாவில் உள்ள வரி முறைகள் குறித்து மெஹ்ராவிற்கு தெரிந்திருக்கவில்லை. இதனால் இப்போது 12.8 கோடி வருமான வரி கட்டவேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டு இருக்கிறார்'' என்று குறிப்பிட்டுள்ளார்.
மெஹ்ரா 150 படகுகள் வாங்க தனது தாயாரின் தங்க ஆபரணங்களை அடகு வைத்ததாகத் தெரிவித்துள்ளார். ``எனது தாயாருக்கு நம்பிக்கை இல்லாமல் இருந்தது. ஆனாலும் என் மீது நம்பிக்கை வைத்து நகைகளை கொடுங்கள் என்று என் தாயாரிடம் கேட்டேன். அவர் கொடுத்த தங்கத்தை அடகு வைத்து படகுகளை வாங்கினேன்" என்று மெஹ்ரா தெரிவித்துள்ளார்.