`ரூ.434 கோடி இழப்பீடு'- டெலிவரி ஊழியருக்கு வழங்க ஸ்டார்பக்ஸ் நிறுவனத்துக்கு உத்தரவு! - என்ன நடந்தது?
கலிபோர்னியாவில் உள்ள நடுவர் மன்றம் ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தால் காயமடைந்த டெலிவரி ஓட்டுநருக்கு, இந்திய மதிப்பில் 434.78 கோடி இழப்பீடு வழங்க உத்தரவிட்டுள்ளது.
ஸ்டார்பக்ஸ் நிறுவனத்தில் ஆர்டர் செய்யப்பட்ட சூடான பானம் சரியாக மூடப்படாததால் அந்த ஓட்டுநர் மீது சிந்தி, கடுமையான தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன.
கடந்த 2020ம் ஆண்டு பிப்ரவரி 8ல் இந்தச் சம்பவம் நடந்துள்ளது. இதில் பாதிக்கப்பட்ட ஓட்டுநர் மைகேல் கார்சியா, லாஸ் ஏஞ்சல்ஸ் ஸ்டார்பக்ஸ் ட்ரைவ்-த்ரூவில் ஆர்டர் எடுத்துள்ளார்.

நடுவர் மன்றம் கூறுவதன்படி, சரியாக மூடப்படாத பானம் கொட்டியதால் கார்சியாவுக்கு மூன்றாம் நிலை தீக்காயங்கள், நரம்பு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
கார்சியாவின் வழக்கறிஞர் மைகேல் பார்கர், தொடையில் சூடான பானம் விழுந்ததால் ஏற்பட்ட காயம் உடல் ரீதியாகவும், உளவியல் ரீதியாகவும் பாதித்ததுடன் அவரது மொத்த வாழ்க்கையையும் கேள்விக்குறியாக்கியுள்ளது என வாதாடியுள்ளார்.
Starbucks விபத்து ஏற்படுத்திய உடல் வலி, மன வேதனை மற்றும் நீண்டகால பிரச்னைகளுக்குக்காக கார்சியாவுக்கு கணிசமான இழப்பீடு வழங்கப்பட வேண்டும் என நீதிமன்றம் முடிவு செய்துள்ளது.
நீதிமன்றத்தின் முடிவை ஏற்கப்போவதில்லை என ஸ்டார்பக்ஸ் கூறியுள்ளது. "எங்களுக்கு கார்சியா மீது அனுதாபம் உள்ளது. ஆனால் நீதிமன்றம் இந்த சம்பவத்துக்கு நாங்கள்தான் காரணம் எனக் கூறுவதும், அதற்கு அதிகப்படியான இழப்பீடு விதிப்பதையும் ஏற்க முடியாது." என ஸ்டார்பக்ஸ் செய்தி தொடர்பாளர் ஜேசி ஆண்டர்சன் கூறியுள்ளார்.
லாஸ் ஏஞ்சல்ஸ் டெய்லி நியூஸ் தளத்தின் அறிக்கைபடி, நீதிமன்ற விசாரணைக்கு முன்னரே ஸ்டார்பக்ஸ் கார்சியாவுக்கு இழப்பீடு தர முன்வந்துள்ளது. ஆரம்பத்தில் ரூ.26 கோடி (3 மில்லியன் டாலர்கள்) தருவதாகக் கூறி பின்னர் அந்த தொகையை ரூ.261 கோடி (30 மில்லியன் டாலர்கள்) வரை உயர்த்தியிருக்கிறது.
இந்த இழப்பீடை ஏற்றுக்கொண்ட கார்சியா, ஸ்டார்பக்ஸ் நிறுவனம் பொதுதளத்தில் மன்னிப்புக் கேட்க வேண்டும் மற்றும் அதன் வழிமுறைகளை திருத்தி, வாடிக்கையாளர்களுக்கு சூடான பானங்களை வழங்குவதற்கு முன்பு அவற்றின் பாதுகாப்பை இருமுறை சரிபார்க்க வேண்டும் என்ற நிபந்தனையை முன்வைத்துள்ளார்.
ஆனால் ஸ்டார்பக்ஸ் நிறுவனம் இந்த நிபந்தனைகளை ஏற்க மறுத்துள்ளது. மேலும் தற்போதைய நீதிமன்ற தீர்ப்புக்கு எதிராக மேல்முறையீடு செய்யப்போவதாகவும் அறிவித்துள்ளது.