குடிபோதையில் கார் ஓட்டி விபத்து ஏற்படுத்திய சட்டக் கல்லூரி மாணவன்: பெண் பலி!
குஜராத்தில் குடிபோதையில் கார் ஓட்டிய சட்டக் கல்லூரி மாணவன் ஏற்படுத்திய விபத்தில் பெண் ஒருவர் பலியானார்.
குஜராத் மாநிலம் வதோதராவைச் சேர்ந்த சட்டக்கல்லூரி மாணவன் ரக்ஷித் சௌரசியா (20). இவர் நேற்று முன்தினம் (மார்ச் 13) மாலை குடிபோதையில் தாறுமாறாக கார் ஓட்டி வந்ததாகக் கூறப்படுகிறது. காரை அதிவேகமாக ஓட்டிய இவர், கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனத்தின் மீது மோதினார்.
கார் மோதியதில் வாகனத்தில் வந்த பெண் சம்பவ இடத்திலேயே பலியானார். இந்த விபத்தில் மேலும் சிலர் காயமடைந்தனர்.
விபத்தை ஏற்படுத்திய மாணவன் காரிலிருந்து வெளியே வந்து, 'ஓம் நமசிவாய' என்றும் 'அடுத்த ரவுண்ட் போலாமா' என்றும் சாலையில் நின்றுகொண்டு கத்தியுள்ளார்.
பொதுமக்கள் ஒன்றுகூடி அந்த மாணவரை அடித்ததில் அவருக்கு காயம் ஏற்பட்டது.
இவரது விடியோ சமூக வலைதளங்களில் வைரலானதைத் தொடர்ந்து அதற்கு கண்டனங்கள் வலுத்தன.
இதையும் படிக்க | ராகுல் காந்தி அடிக்கடி வியட்நாம் செல்வது ஏன்? பாஜக கேள்வி!
இதனைத் தொடர்ந்து, அந்த மாணவர் கைது செய்யப்பட்டார். காவல்துறையினரிடம் அவர் அளித்த வாக்குமூலத்தில், "நாங்கள் ஒரு ஸ்கூட்டிக்கு முன்னால் சென்று கொண்டிருந்தோம். சாலையில் ஒரு பள்ளம் இருந்ததால் அதைத் தவிர்க்க காரை வலதுபுறமாகத் திருப்பினேன். அந்தப் பக்கம் ஒரு ஸ்கூட்டியும் காரும் நின்றிருந்தன.
எங்கள் கார் ஸ்கூட்டரை லேசாக உரசியதும் காரின் ஏர்பேக்குகள் திறந்துகொண்டன. அதன் பிறகு எனக்கு எதுவும் கண்களுக்குத் தெரியவில்லை. விபத்து நடைபெற்ற போது கார் 60 கி.மீ வேகத்துக்குள் தான் சென்றது” என்று தெரிவித்தார்.
தான் எந்தப் போதைப் பொருளையும் எடுத்துக் கொள்ளவில்லை என்று கூறிய மாணவன் பின்னர் பாங் (கஞ்சா) அருந்தியதாக ஒப்புக்கொண்டார்.
விபத்தில் ஒரு பெண் பலியானதாகவும், சிலருக்கு காயம் ஏற்பட்டதாகவும் கூறினார்கள். அது என்னுடைய தவறால் தான் நடைபெற்றது. பாதிக்கப்பட்டவர்களின் குடும்பத்தினரைச் சந்தித்து மன்னிப்புக் கேட்க நினைக்கிறேன். அவர்கள் என்ன முடிவெடுத்தாலும் நான் அதனை ஏற்றுக் கொள்கிறேன்” என்று அந்த மாணவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிக்க | அமெரிக்காவில் ஹமாஸ் ஆதரவு போராட்டத்தில் பங்கேற்ற இந்திய மாணவியின் விசா ரத்து!
”இந்த விபத்து முழுவதும் சிசிடிவி காட்சிகளில் பதிவாகியுள்ளது. ஒரு குழந்தை உள்பட காயமடைந்த அனைவரும் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். ரக்ஷித் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது” என்று துணை காவல் ஆணையர் பன்னா மோமயா கூறினார்.
பலியான பெண் ஹேமாலி படேல் என அடையாளம் காணப்பட்டுள்ளது. அவருடன் சென்ற அவரது கணவர் புரவ் படேல் ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார்.
#WATCH | Gujarat: One woman died in an accident after a four-wheeler collided with a two-wheeler in Vadodara. pic.twitter.com/HL7nFbk43a
— ANI (@ANI) March 14, 2025