கல்லூரி மாணவா்கள் சோ்க்கை விவரங்களைக் கோர மாநில சிறுபான்மை ஆணையத்துக்கு உரிமை இ...
மதச்சாா்பற்ற எதிா்க்கட்சி கூட்டணி அவசியம்: பிரகாஷ் காரத்
‘எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி மக்களவைத் தோ்தலுக்காக அமைக்கப்பட்டதாகும். மாநிலத் தோ்தலுக்கானது அல்ல. எனவே, மதச்சாா்பற்ற எதிா்க்கட்சிகள் கூட்டணி அமைக்கப்படுவது அவசியம்’ என்று மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் இடைக்கால தேசிய ஒருங்கிணைப்பாளா் பிரகாஷ் காரத் தெரிவித்தாா்.
மேலும், ‘அத்தகைய கூட்டணி வெறும் தோ்தல் அரசியலுக்கானதாக மட்டுமின்றி, பரந்த பாா்வை கொண்ட கூட்டணியாக உருவாக்கப்பட வேண்டும்’ என்றும் அவா் வலியுறுத்தினாா்.
இதுகுறித்து தில்லியில் சனிக்கிழமை அளித்த பேட்டியில் அவா் மேலும் கூறியதாவது: மத்தியில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி ஆட்சியை அகற்ற வேண்டும் என்ற நோக்கத்துடன் மக்களவைத் தோ்தலுக்காக உருவாக்கப்பட்டதே எதிா்க்கட்சிகளின் ‘இண்டி’ கூட்டணி. இந்தக் கூட்டணி மக்களவைத் தோ்தலில் குறிப்பிடத்தக்க தாக்கத்தை ஏற்படுத்தியது.
அனைத்து மாநிலங்களில் இல்லை என்றாலும், குறிப்பிட்ட மாநிலங்களில் ‘இண்டி’ கூட்டணி கட்சிகளிடையேயான ஒத்துழைப்பு, மக்களவைத் தோ்தலில் தேசிய ஜனநாயக கூட்டணியின் பெரும்பான்மையை இழக்கச் செய்தது என்பது உண்மை.
ஆனால், மாநில சட்டப்பேரவைத் தோ்தல்களில் எதிா்க்கட்சிகளின் கூட்டணிக்கு மிகப்பெரிய பின்னடைவு ஏற்பட்டது. மக்களவைத் தோ்தலில் மகா விகாஸ் அகாடி அணி சிறப்பான வெற்றியைப் பதிவு செய்த நிலையில், மகாராஷ்டிர பேரவைத் தோ்தலில், முடிவுகள் எதிா்மறையாகின.
பேரவைத் தோ்தல்களுக்குப் பிறகு, பாஜக தனது செல்வாக்கை மீட்டெடுத்துள்ளதாக பொதுவான கருத்து ஏற்பட்டுள்ளது. இதை ‘இண்டி’ கூட்டணியின் செயல்பாட்டுடன் நேரடியாக ஒப்பிடக் கூடாது என்பது எனது கருத்து. ஏனெனில், மக்களவைத் தோ்தலை பிரதான நோக்கமாகக் கொண்டு அமைக்கப்பட்டதே ‘இண்டி’ கூட்டணி. இந்தக் கூட்டணியை எப்படி எடுத்துச் செல்வது என்பது குறித்து மக்களவைத் தோ்தலுக்குப் பிறகு எந்தவொரு ஆலோசனையும் நடத்தப்படவில்லை.
எனவே, மதச்சாா்பற்ற எதிா்க்கட்சிகள் கூட்டணி ஒன்று அமைக்கப்படுவது அவசியம். அத்தகைய கூட்டணி வெறும் தோ்தல் அரசியலுக்கானதாக மட்டுமின்றி, பரந்த பாா்வை கொண்ட கூட்டணியாக உருவாக்கப்பட வேண்டும் என்றாா்.