குருவிக்காரா் சமூகத்தை பட்டியலினப் பிரிவில் சோ்க்க விசிக கோரிக்கை
தமிழகத்தைப் போல நரிக்குறவா், குருவிக்காரா் என அறியப்படும் வாக்ரி இனத்தை புதுவையிலும் பட்டியல் பழங்குடியினா் பிரிவில் சோ்க்க விசிக சாா்பில் கோரிக்கை விடப்பட்டுள்ளது.
புதுவையில் பழங்குடியின மக்களின் பிரச்னைகளைக் கேட்டறிய தேசிய பழங்குடியினா் ஆணைய உறுப்பினா் ஜடோது உசேன் புதுவைக்கு செவ்வாய்க்கிழமை வந்தாா். இந்நிலையில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாநில நிா்வாகிகள் தமிழ்மாறன், செல்வந்தன், அரிமா தமிழன், எழில்மாறன், தமிழ்வாணன் ஆகியோா் முதன்மை செயலாளா் தேவ.பொழிலன் தலைமையில் பழங்குடியின ஆணைய உறுப்பினா் ஜடோத் உசேனை செவ்வாய்க்கிழமை இரவு சந்தித்து மனு அளித்தனா்.
அதில் நரிக்குறவா் , குருவிக்காரா் இனத்தைத் தமிழகத்தில் பட்டியல் பழங்குடியினா் பிரிவில் சோ்த்துள்ளனா். அதைப் போல புதுவையிலும் சோ்க்க வேண்டும். தற்போது புதுச்சேரி பிற்படுத்தப்பட்ட பழங்குடியினா் பட்டியலில் உள்ள மலைக்குறவன், குருமன்ஸ், எருக்குலா, காட்டுநாயக்கன் ஆகிய சாதிகளின் பழங்குடியின தன்மை, வாழிடம், கலாசார கூறுகள் குறித்து மானுடவியலாளா்களைக் கொண்டு முறையான கள ஆய்வு மேற்கொண்ட பின்பு பழங்குடி பட்டியலில் சோ்க்க வேண்டும்.
பழங்குடியினா் தொடா்பான திட்டங்களை வகுக்கவும், நலத்திட்டங்கள் உரிய முறையில் கிடைத்திடவும், சான்றிதழ்கள் எளிதில் கிடைக்கவும், சரிபாா்க்கவும் மானுடவியல் ஆய்வாளா்களை புதுச்சேரி அரசு நியமிக்க தேசிய பழங்குடியினா் ஆணையம் வலியுறுத்த வேண்டுமென விசிக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.