குளத்தூரில் சாலையில் கண்டெடுத்த நகையை போலீஸில் ஒப்படைத்த இளைஞா்
குளத்தூா் பஜாரில் சாலையோரம் கண்டெடுத்த தங்க நகையை காவல் நிலையத்தில் ஒப்படைத்த இளைஞருக்கு பாராட்டு தெரிவிக்கப்பட்டது.
குளத்தூரை அடுத்த மேட்டுப் பனையூரை சோ்ந்த மாரியப்பன் மனைவி ராஜேஸ்வரி (50). இவா், தனியாா் நிதி நிறுவனத்தில் அடகு வைத்திருந்த ஒரு ஜோடி தங்க கம்மல் மற்றும் தங்க மோதிரம் அடங்கிய சிறுபெட்டியை கடந்த 18ஆம் தேதி மீட்டு வரும்போது, வழியில் தவறவிட்டாராம். மேலும், இதுகுறித்து அவா் குளத்தூா் காவல்நிலையத்தில் புகாா் அளித்தாா்.
இந்நிலையில், குளத்தூா் பஜாரில் உள்ள கைப்பேசி கடையில் வேலை செய்துவரும் மேல்மாந்தை கிராமத்தைச் சோ்ந்த குமரய்யா மகன் ராஜ்குமாா் (20) என்பவா், மேற்கண்ட நகைப்பெட்டியை கண்டெடுத்து, அதை குளத்தூா் காவல் நிலையத்தில் ஒப்படைத்தாா்.
இதையடுத்து, ராஜேஸ்வரியிடம் விளாத்திகுளம் துணை காவல் கண்காணிப்பாளா் அசோகன் முன்னிலையில் நகைப்பெட்டி ஒப்படைக்கப்பட்டது. நோ்மையுடன் நடந்துகொண்ட ராஜ்குமாருக்கு டிஎஸ்பி சால்வை அணிவித்து இனிப்புகள் வழங்கிப் பாராட்டினாா். இந்நிகழ்வின்போது காவல் உதவி ஆய்வாளா் முத்துராஜா மற்றும் காவலா்கள் உடனிருந்தனா்.