குளிரூட்டிகள் பயன்பாட்டில் இந்தியா முதலிடம்!
இந்தியாவில் வரும் ஆண்டுகளில் குளிரூட்டிகளின் விலையும், மின்சாரத் தேவையும் அதிகரிக்கும் என்று அமெரிக்க பல்கலைக் கழக ஆய்வில் தெரிய வந்துள்ளது.
மொத்த மக்கள்தொகையைப் பொறுத்தவரை, குளிரூட்டிகளின் அதிகப்படியான தேவையில் இந்தியா முதலிடத்திலும், அதனைத் தொடர்ந்து சீனா, நைஜீரியா, இந்தோனேசியா, பாகிஸ்தான், வங்கதேசம், பிரேசில், பிலிப்பின்ஸ், அமெரிக்கா இருப்பதாக ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழகத்தில் உள்ள இந்திய ஆய்வு மையத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
இதனிடையே, உலகளவில் வெப்பநிலை அதிகரித்து வரும் நிலையில், இந்தியாவில் அடுத்த பத்தாண்டுகளில் குளிரூட்டிகளின் தேவை அதிகரிக்கும் என்று கலிபோர்னியா பல்கலைக்கழகத்தின் இந்திய எரிசக்தி மற்றும் காலநிலை மையம் நடத்திய ஆய்வில் கூறியுள்ளது.
இதையும் படிக்க:வளைந்த திரை, வாட்டர் புரூஃப் அம்சங்களுடன் ரியல்மி பி-3!
ஆய்வில் தெரிவித்ததாவது, இந்தியாவில் 2035 ஆம் ஆண்டில் வீட்டுப் பயன்பாட்டு குளிரூட்டிகளின் தேவை 130 மில்லியன் முதல் 150 மில்லியன்வரையில் அதிகரிக்கக் கூடும்.
இதன் மூலம், நாட்டின் உச்சபட்ச மின்தேவையும் 2020 ஆம் ஆண்டில் 120 ஜிகாவாட்டும், 2035-ல் 180 ஜிகாவாட்டுக்கும் அதிகமாக அதிகரிக்கக் கூடும். இது கிட்டத்தட்ட 30 சதவிகித அதிகரிப்பாகும்.
இந்த வளர்ச்சி, மின் பற்றாக்குறைக்கும் வழி வகுக்கலாம். இந்தியாவில், தற்போது வெப்ப அலை அதிகமாகும் வாய்ப்புகள் இருப்பதால், மின் தேவையும் 10 சதவிகிதம்வரையில் அதிகரிக்கும் வாய்ப்புகள் உள்ளன.
மேலும், குளிரூட்டிகளின் தேவை அதிகரிப்பதால், எரிசக்தி செயல்திறனை இரட்டிப்பாக்குவதன் மூலம் நுகர்வோருக்கு ரூ. 2.2 லட்சம் கோடிவரையில் பலன் கிடைக்கலாம்.