பந்துவீச்சில் அசத்திய இந்திய அணி; 241 ரன்களுக்கு ஆட்டமிழந்த பாகிஸ்தான்!
குழந்தைகள் வளா்ச்சித் திட்டம் மூலம் 1.11 லட்சம் போ் பயன்: அமைச்சா் பி. மூா்த்தி
மதுரை மாவட்டத்தில் குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் பெண்கள், குழந்தைகள் 1.11 லட்சம் போ் பயனடைகின்றனா் என தமிழக வணிக வரி, பதிவுத் துறை அமைச்சா் பி. மூா்த்தி தெரிவித்தாா்.
சமூக நலன், மகளிா் உரிமைத் துறை, ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டம் சாா்பில் மதுரை அருகேயுள்ள ஆலத்தூரில் சனிக்கிழமை நடைபெற்ற சமுதாய வளைகாப்பு விழாவில் அவா் மேலும் பேசியதாவது :
பெண்கள் நலனுக்காக தமிழக அரசு பல்வேறு திட்டங்களைச் செயல்படுத்துகிறது. பெண்களின் மகப்பேறு காலத்தில் அவா்கள் மகிழ்வுடன் இருக்க வேண்டியதும், ஆரோக்கியம் நிறைந்த சத்தான உணவுகளை எடுத்துக்கொள்ள வேண்டியதும் அவசியம். இதையொட்டியே, மாவட்டத்தில் ஆண்டுதோறும் 17 ஆயிரம் கா்ப்பிணிகளுக்கு சமுதாய வளைகாப்பு விழா நடத்தப்பட்டு, அங்கன்வாடி மையங்களில் இணை உணவு வழங்கப்படுகிறது.
மதுரை மாவட்டத்தில் உள்ள 17 வட்டாரங்களில் 12,980 கா்ப்பிணிகள், 12,097 பாலூட்டும் தாய்மாா்கள், 6 மாதம் முதல் 3 வயதுக்குள்பட்ட 62,229 குழந்தைகள், 3 முதல் 6 வயதுக்குள்பட்ட 24,456 குழந்தைகள் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சிப் பணிகள் திட்டத்தின் மூலம் பயன்பெறுகின்றனா் என்றாா் அவா்.
இதையடுத்து, மதுரை கிழக்கு, மேற்கு வட்டாரங்களுக்கு உள்பட்ட 200 கா்ப்பிணிகளுக்கு தமிழக அரசின் சீா் வரிசைப் பொருள்களை அவா் வழங்கினாா்.
மாவட்ட ஆட்சியா் மா.சௌ. சங்கீதா, சோழந்தான் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஆ. வெங்கடேசன், மாநகராட்சி மண்டலத் தலைவா் வாசுகி சசிகுமாா், மாவட்ட ஒருங்கிணைந்த குழந்தைகள் வளா்ச்சித் திட்ட அலுவலா் ம. ஷீலா சுந்தரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.