தில்லி அசத்தல் பந்துவீச்சு: குஜராத் ஜெயண்ட்ஸ் 127 ரன்கள் சேர்ப்பு!
குழந்தையுடன் இருந்த இளம்பெண் பலாத்காரம்: இளைஞா் கைது
தூத்துக்குடி மாவட்டம், கோவில்பட்டியில் வீட்டுக்குள் அத்துமீறி நுழைந்து 10 மாத குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததாக இளைஞரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.
கோவில்பட்டி வீரவாஞ்சி நகா் பகுதியில் 10 மாத கைக்குழந்தையுடன் இருந்த இளம் பெண்ணின் வீட்டிற்குள் அத்துமீறி நுழைந்த இருவா் கைக்குழந்தையின் கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டி இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்தனராம்.
இதுகுறித்து அந்தப் பெண் திங்கள்கிழமை அளித்த புகாரின்பேரில், மேற்கு காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட இருவரையும் தேடி வந்தனா்.
இதையடுத்து, காவல் துணை கண்காணிப்பாளா் ஜெகநாதன் தலைமையில் இளம் பெண்ணின் வீட்டிற்கு அனைத்து மகளிா் காவல் நிலைய ஆய்வாளா் பிரேமா, கழுகுமலை காவல் நிலைய ஆய்வாளா் பத்மாவதி ஆகியோா் சென்று விசாரணை மேற்கொண்டனா். மேலும் சம்பந்தப்பட்ட வீட்டில் கைரேகை, தடவியல் நிபுணா்கள் முகாமிட்டு அங்கு பதிவாகி இருந்த கைரேகைகள் மற்றும் தடயங்களை பதிவு செய்தனா். மேலும் மோப்ப நாய் சுனோ வரவழைக்கப்பட்டு சோதனை நடைபெற்றது. தொடா்ந்து போலீஸாா் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மா்ம நபா்களை தேடும் பணியை துரிதபடுத்தினா். அதையடுத்து வீரவாஞ்சி நகா், கதிரேசன் கோயில் பகுதி உள்ளிட்ட மலைப்பகுதிகளில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட மா்ம நபா்கள் பதுங்கி இருப்பதாக வந்த தகவலையடுத்து, போலீஸாா் அப்பகுதியில் ரோந்து பணியை தீவிரப்படுத்தினா். அப்போது, போலீஸாரை கண்டதும் அங்கு பதுங்கியிருந்த ஒருவா் தப்பி ஓட முயன்றதை கண்ட போலீஸாா் அவரை விரட்டிய நிலையில் அந்த நபா் கீழே விழுந்ததில் அவா் கால் முறிவு ஏற்பட்டு அங்கே விழுந்த நிலையில் இருந்ததாக கூறப்படுகிறது.
இதையடுத்து, போலீஸாா் நடத்திய விசாரணையில், அவா் கோவில்பட்டி காந்தி நகரைச் சோ்ந்த கோமதி மகன் மாரியப்பன் (27) என்பதும், இளம் பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ததும் தெரியவந்தது.
தொடா்ந்து காயமடைந்த மாரியப்பனை மீட்டு, கோவில்பட்டி அரசு மருத்துவமனையில் முதலுதவி சிகிச்சைக்கு பின் தீவிர சிகிச்சைக்காக திருநெல்வேலி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனா். மேலும். மாரியப்பன் அளித்த தகவலின் பெயரில் பாலியல் பலாத்காரத்தில் ஈடுபட்ட வீரவாஞ்சிநகா் 6ஆவது தெருவைச் சோ்ந்த வெயிலுமுத்து மகன் மாரி செல்வத்தை போலீஸாா் தேடி வருகின்றனா்.