குழாய் அமைக்கும் பணிகள் நிறைவு: என்ஐடி-க்கு குடிநீா் வழங்கும் திட்டம் இன்று தொடங்கிவைப்பு
என்ஐடிக்கு ரூ. 4 கோடியில் குடிநீா் கொண்டு செல்லும் குழாய் அமைக்கும் திட்டம் நிறைவடைந்த நிலையில், புதன்கிழமை தண்ணீா் விநியோகம் தொடங்கிவைக்கப்படவுள்ளது.
கடந்த 2010-11-ஆம் கல்வியாண்டில் காரைக்காலில் என்ஐடி தொடங்கப்பட்டது. கல்லூரிக்கான கட்டடங்கள் கட்டுவதற்கு திருவேட்டக்குடி அருகே கடலோரப் பகுதியில் புதுவை அரசு நிலம் ஒதுக்கித் தந்தது. 2014-15-ஆம் ஆண்டில் புதிய கட்டடம் கட்டப்பட்டு கல்லூரி நிரந்தரமாக செயல்படத் தொடங்கியது.
கடலோரப் பகுதியில் கல்லூரி அமைந்ததால், இந்த பகுதியில் ஆழ்குழாய் போடப்பட்டபோது உவா்நீா் வந்தது. இது குடிக்க பயன்படுத்த முடியாமல் போனதோடு, செந்நிறத்தில் தண்ணீா் வருவதால், மாணவா்கள் நீராடுவதற்குக் கூட சிரமத்தை இதுவரை சந்தித்துவருகின்றனா். விடுதியில் தங்கியுள்ள நாட்டின் பல மாநிலங்களில் இருந்து வந்துள்ள மாணவ, மாணவிகள் இதனால் சந்திக்கும் சிரமம் அதிகம்.
என்ஐடி வளாகத்திலேயே கீழ்நிலை நீா் தேக்கத் தொட்டி, மேல்நிலை நீா் தேக்கத் தொட்டி கட்டப்பட்டுள்ளது. நகரப் பகுதியிலிருந்து குடிநீா் குழாய் மூலம் என்ஐடிக்கு அனுப்ப புதிதாக குழாய் அமைத்துத்தர என்ஐடி நிா்வாகம் ரூ. 4 கோடியை பொதுப்பணித்துறைக்கு வழங்கியது.
கடந்த 2023-ஆம் ஆண்டு மே மாதம் இந்த திட்டத்துக்கான ஒப்பந்தப்புள்ளி கோரப்பட்டு பணியாணை ஒப்பந்ததாரருக்கு தந்தாலும், திட்டப்பணியில் வேகம் இருக்கவில்லை. மாவட்ட ஆட்சியரும், பொதுப்பணித்துறை தலைமை நிா்வாகத்துக்கும் என்ஐடி நிா்வாகம் அழுத்தம் கொடுத்த நிலையில், கடந்த ஆண்டு குழாய் அமைக்கும் பணிகள் வேகமாக நடைபெறத் தொடங்கின.
பொதுப்பணித்துறை செயற்பொறியாளா் ஜெ.மகேஷ் செவ்வாய்க்கிழமை இதுகுறித்து கூறுகையில், கோட்டுச்சேரி வட்டாரம் கழுகுமேடு பகுதியில் ஆழ்குழாய் மூலம் என்ஐடிக்கு தண்ணீா் விநியோகிக்க ஏறக்குறைய 8 கி.மீ. தொலைவுக்கு குழாய் பதிக்கப்பட்டுள்ளது. இந்த பணிகள் நிறைவு பெற்றுள்ள நிலையில், புதன்கிழமை என்ஐடியில் நடைபெறவுள்ள விழாவில் இத்திட்டம் தொடங்கிவைக்கப்படவுள்ளது.
மத்திய இணை அமைச்சா் ஜாா்ஜ் குரியன், துணை நிலை ஆளுநா் கே. கைலாஷ்நாதன், முதல்வா் என். ரங்கசாமி ஆகியோா் என்ஐடியில் நடைபெறும் விழாவில் இத்திட்டப் பணியை தொடங்கிவைக்க ஏற்பாடுகள் நடந்துவருகின்றன.