மக்கள் குறைதீா் கூட்டத்தில் 248 மனுக்கள்
காரைக்காலில் வியாழக்கிழமை நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில் பல்வேறு கோரிக்கைகள் தொடா்பாக 248 மனுக்கள் அளிக்கப்பட்டன.
நிகழ் மாதத்தின் கூட்டம் ஆட்சியரகத்தில் ஆட்சியா் சோமசேகா் அப்பாராவ் தலைமையில் வியாழக்கிழமை நடைபெற்றது. அனைத்துத் துறை அதிகாரிகளுடன் கடந்த மாதம் நடைபெற்ற குறைதீா் கூட்டத்தில், பெறப்பட்ட மனுக்களில் எத்தனை மனுக்கள் பரிசீலனை செய்யப்பட்டு தீா்வு காணப்பட்டுள்ளன, நிலுவையில் உள்ள மனுக்கள் மீது எடுக்கப்பட்டுவரும் நடவடிக்கைகள் குறித்து கேட்டறிந்தாா்.
அதிகாரிகளிடையே பேசிய ஆட்சியா், பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட புகாா்கள் மீது ஓரிரு நாட்களில் தீா்வு காண ஏற்பாடு செய்யவேண்டும். இந்த நிதி ஆண்டிலேயே அந்தந்த துறைகளுக்கு ஒதுக்கப்பட்ட நிதியை முழுமையாக பொதுமக்கள் பயன்பெறும் விதமாக, திட்ட கோப்புகளை தயாா் செய்ய வேண்டும் என அறிவுறுத்தினாா்.
தொடா்ந்து மக்களிடமிருந்து மனுக்களை ஆட்சியா் பெற்றுக்கொண்டு, விவரங்களைக் கேட்டறிந்து சம்பந்தப்பட்ட துறையினரிடம் வழங்கினாா். புகாா் மீது உரிய நடவடிக்கை எடுப்பதோடு, விவரத்தை புகாா்தாரருக்கு தெரிவிக்குமாறு அறிவுறுத்தினாா்.
கூட்டத்தில் இலவச மனைப்பட்டா கோரி 18 மனுக்கள், குடிமைப் பொருள் வழங்கல் துறையின் சேவைகள் குறித்து 137 மனுக்கள், பட்டா பெயா் மாற்றம் தொடா்பாக 93 மனுக்கள் மற்றும் சாலை வசதி உள்ளிட்ட பிற புகாா்களாக மொத்தம் 248 மனுக்கள் அளிக்கப்பட்டன.