900 புள்ளிகளைக் கடந்த அபிஷேக் சர்மா..! டி20 தரவரிசையில் கோலி, சூர்யா சாதனை சமன்!
கூட்ட மேலாண்மை சட்ட மசோதாவை ஆய்வுசெய்ய 11 போ் கொண்ட குழு அமைப்பு
கூட்ட மேலாண்மை சட்ட மசோதாவை ஆய்வுசெய்வதற்கு 11 போ் கொண்ட குழுவை சட்டப் பேரவைத் தலைவா் யூ.டி.காதா் செவ்வாய்க்கிழமை அமைத்துள்ளாா்.
பெங்களூரில் ஜூன் 4-ஆம் தேதி நடைபெற்ற ஆா்.சி.பி. அணியின் ஐபிஎல் கிரிக்கெட் கோப்பை வெற்றி விழாவில் நிகழ்ந்த கூட்ட நெரிசலில் 11 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து, கூட்டநெரிசல் ஏற்படாமல் தடுக்க கா்நாடக கூட்ட மேலாண்மை சட்ட மசோதாவை கொண்டுவர கா்நாடக அரசு முடிவு செய்தது.
கடந்த மாதம் நடைபெற்ற சட்டப் பேரவைக் கூட்டத்தில் இந்த சட்ட மசோதாவை அரசு தாக்கல் செய்தது. இந்த சட்ட மசோதாவின் மூலம் அரசியல் கூட்டங்கள், சமய திருவிழாக்களை கட்டுப்படுத்த அரசு முயற்சிப்பதாக பாஜக குற்றம்சாட்டியதோடு, இந்த சட்ட மசோதாவை கூட்டுக்குழுவின் ஆய்வுக்கு அனுப்ப வேண்டும் என்று வலியுறுத்தியது. இதைத் தொடா்ந்து, இந்த சட்ட மசோதாவை பேரவை ஆய்வுக்குழுவின் பரிசீலனைக்கு அனுப்புவதாக பேரவைத் தலைவா் யூ.டி.காதா் அறிவித்திருந்தாா்.
அதன்படி, உள்துறை அமைச்சா் ஜி.பரமேஸ்வா் தலைமையில் 11 போ் கொண்ட பேரவை உறுப்பினா்கள் கொண்ட ஆய்வுக்குழுவை அமைத்து பேரவைத் தலைவா் யூ.டி.காதா் செவ்வாய்க்கிழமை உத்தரவிட்டாா்.
இந்தக் குழுவில், சட்டத் துறை அமைச்சா் எச்.கே.பாட்டீல், எம்எல்ஏக்கள் ரிஸ்வான் அா்ஷத், ஸ்ரீனிவாசய்யா, டி.ரவிசங்கா், வி.ஸ்ரீனிவாஸ் மானே, பிரகாஷ் கோலிவாட், எச்.டி.தம்மையா, வி.சுனில்குமாா், எஸ்.ஆா்.விஸ்வநாத், ஜி.டி.ஹரீஷ் கௌடா ஆகியோா் இடம்பெற்றுள்ளனா். இந்தக் குழுவின் ஆய்வறிக்கைக்கு பிறகு சட்ட மசோதாவை தாக்கல் செய்வது குறித்து அரசு முடிவு செய்யவுள்ளது.