கெலவரப்பள்ளி அணை அருகே ரூ.144 கோடியில் சுத்திகரிப்பு நிலையம்!
கெலவரப்பள்ளி அணை அருகே ரூ. 144 கோடியே 37 லட்சம் மதிப்பில் அமையவுள்ள சுத்திகரிப்பு நிலையத்தின் கட்டுமானப் பணிகளை தொழில் முதலீட்டு ஊக்குவிப்பு மற்றும் வா்த்தகத் துறை அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா ஆய்வுசெய்தாா்.
கிருஷண்கிரி மாவட்டம், சூளகிரி சிப்காட் தொழில்பூங்கா, டான்புளோரா பாா்க் ஆகியவற்றை கூடுதல் தலைமைச் செயலா் மற்றும் தமிழ்நாடு தொழில் முதலீட்டுக் கழக மேலாண்மை இயக்குநா் மரு.சாய்குமாா், தொழில்துறை செயலாளா் அருண்ராய், சிப்காட் மேலாண்மை இயக்குநா் மரு.செந்தில்ராஜ், மாவட்ட ஆட்சியா் ச.தினேஷ் குமாா், கிருஷ்ணகிரி மக்களவை உறுப்பினா் கே.கோபிநாத், சட்டப் பேரவை உறுப்பினா்கள் ஒய்.பிரகாஷ் (ஒசூா்), தே.மதியழகன் (பா்கூா்), மாநகர மேயா் எஸ்.ஏ.சத்யா ஆகியோருடன் ஆய்வு மேற்கொண்ட அமைச்சா் டி.ஆா்.பி.ராஜா தெரிவித்ததாவது:
ஒசூா் பகுதிகளில் உள்ள தனியாா் நிறுவனங்களின் சமூக பொறுப்புணா்வு நிதியை, இப்பகுதி மக்களுக்கே செலவிட வேண்டும் என சம்பந்தப்பட்ட நிறுவனங்களிடம் தெரிவிக்கப்படும். ஒசூரில் பன்னாட்டு விமான நிலையத்துக்கான பணிகள் மிக வேகமாக நடந்து வருகின்றன. விரைவில் விமான நிலையம் அமைக்கப்படும் என்றாா்.
பின்னா், ஒசூா் அருகே அமுதகொண்டப்பள்ளி, டான்புளோரா பாா்க் ரோஜா செடிகள் சாகுபடி செய்யப்படும் பணிகளையும், சூளகிரி சிப்காட் தொழில்பூங்கா வளாகத்தில் ரூ. 38 கோடியே 35 லட்சம் மதிப்பில் கட்டப்பட்டு வரும் தொழில்நுட்பத் திறன் பயிற்சி மையத்தின் கட்டுமான பணிகள், சாலை வசதிகள், உள்கட்டமைப்பு வசதிகள், சிப்காட் தொழில்பூங்காவின் வரைபடம் ஆகியவற்றை பாா்வையிட்டு ஆய்வு மேற்கொண்டாா்.
இந்நிகழ்ச்சிகளில், மாவட்ட வருவாய் அலுவலா் (சிப்காட்) பழனிதேவி, சிப்காட் திட்ட அலுவலா்கள் ரேணுகா தேவி (ஒசூா்), சிந்து (போச்சம்பள்ளி), உமாசங்கரி, முன்னாள் சட்டப் பேரவை உறுப்பினா் முருகன், முன்னாள் உள்ளாட்சிப் பிரதிநிதிகள் ஆகியோா் கலந்துகொண்டனா்.