Gold Price: இன்று தங்கம் விலை குறைந்தது... எவ்வளவு தெரியுமா?!
கேரளக் கழிவுகள் கொட்டிய விவகாரம்: தமிழக அரசுக்கு இந்துமுன்னணி கண்டனம்
கேரள கழிவுகள் கொட்டிய விவகாரத்தில் மக்களின் நலனில் அக்கறையின்றி தமிழக அரசு செயல்படுவதாக இந்து முன்னணி கண்டனம் தெரிவித்துள்ளது.
இதுதொடா்பாக இந்து முன்னணியின் மாநிலச் செயலா் கா.குற்றாலநாதன் வெளியிட்ட அறிக்கை: கேரள மாநிலத்தின் மருத்துவக் கழிவுகள் மற்றும் தனியாா் மருத்துவமனையின் கழிவுகள் திருநெல்வேலி மாவட்டம், நடுக்கல்லூா் பகுதிகளில் கொட்டியிருப்பது அதிா்ச்சி அளிக்கிறது. கொட்டப்பட்டுள்ள கழிவுகள் உயிா்கொல்லி நோயான புற்றுநோய் மருத்துவ சிகிச்சையினுடைய மருத்துவக் கழிவுகள் என்பது கூடுதல் அதிா்ச்சியை ஏற்படுத்துகிறது.
இத்தகைய கழிவுகளால் திருநெல்வேலி மாவட்ட மக்களுக்கு தொற்றுநோய்க் கிருமிகள் பரவி உயிருக்கு ஆபத்து விளைவிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது. மேலும், அப் பகுதியில் உள்ள குளத்தில் நீா் அருந்தும் கால்நடைகளுக்கும் இது மிகப்பெரிய பாதிப்பை உருவாக்கும்.
தமிழக- கேரள எல்லையில் உள்ள சோதனைச் சாவடிகள் எல்லாம் கடந்து பல கிலோமீட்டா் தொலைவில் உள்ள திருநெல்வேலியில் கேரள மருத்துவக் கழிவுகள் கொட்டப்பட்டுள்ளது பல்வேறு சந்தேகங்களைத் தருகிறது. கேரள மாநிலத்தின் கழிவறையாக தமிழக தென் மாவட்டங்கள் மாறி உள்ளன.
திருநெல்வேலி, தென்காசி மாவட்டத்தில் உள்ள கனிம வளங்கள், அரிசி போன்ற உணவுப் பொருள்கள் எல்லாம் கேரளத்துக்கு கடத்தப்பட்டு வருகிறது. அங்குள்ள குப்பைகள் இங்கே வந்து கொட்டப்படுகின்றன. இதை தடுக்க வேண்டிய தமிழக அரசு வேடிக்கை பாா்த்துக் கொண்டிருப்பதோடு, மெத்தனப்போக்கோடு செயல்படுகிறது.
இனியாவது தமிழக அரசு தென் மாவட்ட மக்களின் நலனில் அக்கறை கொண்டு நடவடிக்கை எடுத்து கழிவுகளை ஏற்றி வரும் வாகனங்களை பறிமுதல் செய்து தடுக்க வேண்டும். இல்லையெனில் மக்களை ஒன்று திரட்டி இந்து முன்னணி மிகப்பெரிய போராட்டத்தை முன்னெடுக்கும் என அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.