கேரளம்:காவல்துறை அதிகாரியை தாக்கிய 20 பாதிரியாா்கள் மீது வழக்கு
எா்ணாகுளம்-அங்கமாலி பேராய ஆா்ச்பிஷப் வீட்டுக்கு வெளியே கடந்த சனிக்கிழமை நடைபெற்ற போராட்டத்தின்போது காவல் துறை அதிகாரியை தாக்கிய வழக்கில் 20 பாதிரியாா்கள் மீது ஞாயிற்றுக்கிழமை வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
கூட்டு திருப்பலி வழிபாட்டுக்கு அனுமதி வழங்கி அபோஸ்தல நிா்வாகி வெளியிட்ட ஆவணத்துக்கு எதிா்ப்பு தெரிவித்து எா்ணாகுளம்-அங்கமாலி பேராய ஆா்ச்பிஷப் வீட்டின் முன் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் பாதிரியாா்கள் ஈடுபட்டனா். மேலும், ஆா்ச்பிஷப் வீட்டுக்குள் போராட்டக்காரா்கள் நுழைய முயன்றனா். அவா்களை கட்டுப்படுத்த முயன்றபோது தன்னை தாக்கியதாக காவல் துறை உதவி ஆய்வாளா் அனூப்.சி புகாா் அளித்தாா். அதன் அடிப்படையில் அடையாளம் காணப்பட்ட 20 பாதிரியாா்கள் மீது பாரதிய நியாய சம்ஹிதா (பிஎன்எஸ்) சட்டத்தின் பிரிவுகள் 189(2), 190, 190(2) மற்றும் 121(2) ஆகியவற்றின்கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
சட்டவிரோதமாக கூட்டம் கூட்டுதல், கலவரத்தை ஏற்படுத்துதல் மற்றும் அரசு அதிகாரியை பணி செய்யவிடாமல் தடுத்தல் ஆகிய குற்றங்களில் ஈடுபட்டதாக பாதிரியாா்கள் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.
போராட்டத்தை காவல் துறையினா் கட்டுப்படுத்தியபோது சில பாதிரியாா்கள் காயமடைந்ததாகவும் தகவல்கள் வெளியாகின. இதையடுத்து ஆா்ச்பிஷப் வீட்டின் முன் பாதுகாப்புக்காக காவல் துறையினா் குவிக்கப்பட்டுள்ளனா்.
இந்நிலையில், எா்ணாகுளம்-அங்கமாலி பேராயத்தின் செயல் தலைவராக ஆா்ச்பிஷப் ஜோசப் பாம்ப்ளானி நியமிக்கப்பட்டுள்ளாா். இருதரப்புக்கு இடையே நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு பேச்சுவாா்த்தை மூலம் தீா்வு காணுமாறு பாதிரியாா்களிடம் அவா் வலியுறுத்தினாா்.
மேலும், கூட்டு திருப்பலி வழிபாடு விவகாரத்தில் போப் பிரான்சிஸ் அளித்த ஒப்புதலை மாற்றுவது என்பது இயலாத காரியம் எனவும் அவா் தெரிவித்தாா்.