Tushar Gandhi: காந்தியின் பேரனை மறித்து கோஷம்; ஆர்எஸ்எஸ்-பாஜக நிர்வாகிகள் மீது வ...
கேரளா: மகாத்மா காந்தியின் பேரனுக்கு எதிராக RSS தொண்டர்கள் ஆர்பாட்டம்! - காரணம் என்ன?
'இந்திய தேசத்தின் ஆன்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது' என தேசத் தந்தை மகாத்மா காந்தியின் பேரன் துஷர் காந்தி தெரிவித்திருக்கிறார். கேரளா மாநிலம், திருவனந்தபுரம் மாவட்டத்தில் உள்ள நெய்யாட்டின்கராவில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்டு, மகாத்மா காந்தியின் சிலையை திறந்துவைத்து உரையாற்றினார். அப்போது, ``தேசத்தின் ஆன்மா புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளது. அதை சங்-பரிவார் மேலும் பரப்புகிறது" எனப் பேசினார். இந்தக் கருத்தை எதிர்த்து மகாத்மா காந்தியின் பேரன் துஷார் காந்திக்கு எதிராக, ஆர்.எஸ்.எஸ் தொண்டர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
அதனால் அந்தப் பகுதியில் பதற்றம் நிலவியது. துஷர் காந்தி தன் கருத்தை திரும்பப் பெற வேண்டும் என வலியுறுத்தி ஆர்ப்பாட்டதில் ஈடுபட்டவர்கள் கோஷம் எழுப்பினர். தன் கருத்தை பின்வாங்க மறுத்து, அதில் உறுதியாக இருந்த துஷர் காந்தி, ``காந்தி வாழ்க, ஆர்.எஸ்.எஸ் ஒழிக" என முழங்கினார். தொடர்ந்து விடாமல் போராட்டக்காரர்கள் கோஷங்களை எழுப்பி துஷர் காந்தியின் காரை மறித்தனர்.
தன் கருத்தில் பிடிவாதமாக இருந்த துஷர் காந்தி, கோஷம் எழுப்பிக்கொண்டே அங்கிருந்து புறப்பட்டு சென்றுவிட்டார். அதனால், அந்தப் பகுதியில் சற்று பரபரப்பான சூழல் நிலவியது. இதற்கிடையில், காங்கிரஸ் கட்சியின் கேரளத் தலைவர் கே.சுதாகரன், பா.ஜ.க, ஆர்,எஸ்.எஸ்-சை கடுமையாக விமர்சித்திருந்தார். ``இந்தக் கூட்டம் (நாதுராம்) கோட்சேவின் பேயால் வேட்டையாடப்படுகிறது. இந்த சம்பவம் குறித்த சி.பி.எம்-ன் மௌனம் சந்தேகத்தை எழுப்புகிறது" என்றார்.