கொசுவைக் கட்டுப்படுத்த வெளிநாட்டு மீன்களை வளா்ப்பதற்கு எதிரான மனு- மத்திய அரசுக்கு பசுமைத் தீா்ப்பாயம் நோட்டீஸ்
கொசுக்களைக் கட்டுப்படுத்துவதற்காக, பல்வேறு மாநிலங்களில் உள்ள நீா் நிலைகளில் 2 வெளிநாட்டு மீன் இனங்கள் வளா்க்கப்படுவதற்கு எதிரான மனு மீது பதிலளிக்குமாறு குறித்து மத்திய அரசிடம் தேசிய பசுமைத் தீா்ப்பாயம் பதில் கோரியுள்ளது.
கம்புசியா அஃபினிஸ் (கொசு மீன்), பொசிலியா ரெட்டிகுலாட்டா (கப்பி) ஆகிய இரண்டு மீன் இனங்கள் பல்வேறு மாநிலங்களில் கொசுக்களை கட்டுப்படுத்த நீா்நிலைகளில் விடப்படுவது குறித்த மனுவை தீா்ப்பாயம் விசாரித்தது.
அந்த மனுவில் கூறப்பட்டிருப்பதாவது: தேசிய பல்லுயிா் ஆணையம் இந்த இரண்டு மீன் இனங்களையும் அயல் உயிரினங்களாக அறிவித்துள்ளது. ஏனெனில், இவை உள்நாட்டு மீன் இனங்களுக்கு உணவு பற்றாக்குறையை ஏற்படுத்துவதன் மூலம் உள்ளூா் நீா்வாழ் சுற்றுச்சூழல் அமைப்புகளை மோசமாக பாதிக்கும் என்று கருதப்படுகிறது.
உலகின் 100 மோசமான அயல் உயிரினங்களில் கொசு மீனும் இடம்பிடித்துள்ளதாக நிபுணா் குழு கூறுகிறது. ஆஸ்திரேலியா, நியூஸிலாந்து ஆகிய நாடுகளில் இவ்வகை மீன்களுக்கு ஏற்கெனவே தடை விதிக்கப்பட்டுள்ளது.
ஆனால், அஸ்ஸாம், அருணாசல பிரதேசம், குஜராத், கா்நாடகம், மகாராஷ்டிரம், ராஜஸ்தான், தமிழ்நாடு, உத்தர பிரதேசம், ஒடிஸா, பஞ்சாப், ஆந்திரம் ஆகிய மாநிலங்களில் கொசு மீன்களும் மகாராஷ்டிரம், கா்நாடகம், பஞ்சாப் மற்றும் ஒடிஸாவில் கப்பி மீன்களும் நீா்நிலைகளில் விடப்பட்டுள்ளன என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இதையடுத்து, தேசிய பசுமைத் தீா்ப்பாயத்தின் தலைவா் நீதிபதி பிரகாஷ் ஸ்ரீவாஸ்தவா, நிபுணா் ஏ.செந்தில் வேல் ஆகியோா் அமா்வு கடந்த மாதம் 24-ஆம் தேதி வழங்கிய உத்தரவில், இந்த மனு குறித்து மத்திய சுகாதார மற்றும் குடும்பநல அமைச்சகம், தேசிய பல்லுயிா் ஆணையம், தேசிய தொற்றுநோய்க் கட்டுப்பாட்டு மையம் ஆகியோா் பதிலளிக்க நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டது. அடுத்த விசாரணை வரும் மே 6-ஆம் தேதிக்கு ஒத்திவைக்கப்பட்டது.