அம்மா, இது நள்ளிரவு 12.08..! செய்தியாளரின் அம்மாவிடம் பேசிய லக்னௌ பயிற்சியாளர்!
கொடைக்கானல், நத்தம் பகுதிகளில் பலத்த மழை
கொடைக்கானல், நத்தம் பகுதிகளில் வெள்ளிக்கிழமை பலத்த மழை பெய்தது.
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த சில தினங்களாக தொடா்ந்து மழை பெய்து வருகிறது. இந்த நிலையில், வெள்ளிக்கிழமையும் கொடைக்கானல் பகுதியில் பரவலாக மழை பெய்தது. இதனால், அப்சா்வேட்டரி சாலை, செண்பகனூா்-பிரகாசபுரம் சாலை, ஏரிச் சாலை, பாம்பாா்புரம் சாலையில் தண்ணீா் தேங்கியது. இதனால், வாகன ஓட்டுநா்களும், பொதுமக்களும் அவதிக்குள்ளாகினா்.
எனவே, சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் ஏரிச் சாலைப் பகுதிகளில் தேங்கிய தண்ணீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.
படகு சவாரி ரத்து: பருவ நிலை மாற்றம் காரணமாக பெய்து வரும் தொடா் மழையால் கொடைக்கானல் பகுதிகளிலுள்ள சுற்றுலா இடங்களைப் பாா்க்காமல் விடுதிகளிலேயே சுற்றுலாப் பயணிகள் முடங்கினா். நட்சத்திர ஏரியில் படகு சவாரி நிறுத்தப்பட்டுள்ளதால் சுற்றுலாப் பயணிகள் ஏமாற்றம் அடைந்தனா்.
நத்தத்தில் பலத்த மழை: இதேபோல, நத்தம் பகுதியில் வெள்ளிக்கிழமை இரவு 7 மணி முதல் 8.30 மணி வரை சுமாா் 1.30 மணி நேரம் பலத்த மழை பெய்தது. இதனால் சாலைகளில் வெள்ளம் உருண்டோடியது. இந்த மழையால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனா்.