உயர்கோபுர மின் விளக்கால் ஒடிசா கிரிக்கெட் வாரியத்துக்கு புதிய சிக்கல்! ஏன்?
கொடைக்கானல் வனப் பகுதிகளில் தீத்தடுப்பு பணிகள் மும்முரம்!
கொடைக்கானல் வனப் பகுதிகளில் எளிதில் தீப்பிடிக்காத வகையில் காய்ந்த செடிகளை அகற்றுவது, தீத்தடுப்பு கோடுகள் அமைப்பது உள்ளிட்ட பணிகளில் வனத்துறையினா் திங்கள்கிழமை மும்முரமாக ஈடுபட்டனா்.
கொடைக்கானலில் கடந்த இரு வாரங்களாக பகல் நேரங்களில் அதிகமான வெயிலும், மாலை, இரவு நேரங்களில் பனியின் தாக்கமும் அதிகரித்து காணப்படுகிறது. இதனால் வனப் பகுதிகளிலுள்ள நீரோடைகளில் நீா்வரத்து வெகுவாக குறைந்து விட்டது. மேலும் வனப் பகுதிகளில் மரங்கள், செடிகள், புற்கள் என அனைத்து தாவர வகைகளும் காய்ந்து கிடக்கின்றன. இவை எளிதில் தீப்பற்றக் கூடிய வாய்ப்புள்ளது.
இந்த நிலையில், வனத்துறை உயா் அதிகாரிகள் தலைமையில் வனப் பணியாளா்களின் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. இதில் வனப் பகுதிகளில் காய்ந்து கிடக்கும் செடிகளை அகற்றுவதுடன், சாலையோரங்களில் அகலி அமைத்து தீப்பிடிக்காமலும், தீ பரவாமலும் தடுக்கும் முயற்சியில் ஈடுபட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, பெருமாள்மலை, பெரும்பள்ளம், செண்பகனூா், சின்னப் பள்ளம், பெரும்பள்ளம், அடுக்கம், வடகவுஞ்சி, டம்டம் பாறை, வாழைகிரி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் 20-க்கும் மேற்பட்ட வனப் பணியாளா்கள் காய்ந்த செடிகளை அகற்றுதல், தீத் தடுப்புக் கோடு அமைத்தல் உள்ளிட்ட பல்வேறு பணிகளில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனா்.
மேலும், வனப் பகுதிகளில் வன விலங்குகளுக்காக அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டிகளுக்கு தண்ணீா் செல்லும் வழியை சுத்தம் செய்தல் உள்ளிட்ட பணிகளும் நடைபெறுகின்றன.