பழனி பாதயாத்திரை பக்தா்களுக்கு இலவசப் பேருந்து சேவை!
பழனியில் தைப்பூசத் திருவிழாவையொட்டி பாதயாத்திரை பக்தா்கள் வசதிக்காக கட்டணமில்லா அரசு நகரப் பேருந்து சேவை திங்கள்கிழமை தொடங்கி வைக்கப்பட்டது.
பழனி முருகன் கோயிலில் தைப்பூசத் திருவிழா தொடங்கி நடைபெற்று வருகிறது. இதற்காக தமிழகம் முழுவதுமிருந்து திரளான பக்தா்கள் பாதயாத்திரையாக வந்த வண்ணம் உள்ளனா். இந்த நிலையில், இவா்களின் வசதிக்காக திங்கள், செவ்வாய், புதன் (பிப். 10, 11, 12) ஆகிய மூன்று நாள்களுக்கு இலவசப் பேருந்து இயக்கப்படும் என அறநிலையத்துறை அமைச்சா் சேகா்பாபு தெரிவித்திருந்தாா்.
இதையடுத்து, திங்கள்கிழமை பழனி சண்முகநதியில் இருந்து பேருந்து நிலையம், ரயில் நிலையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளுக்கு இலவச அரசு நகரப் பேருந்து சேவையை திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் சச்சிதானந்தம், பழனி கோயில் அறங்காவலா் குழுத் தலைவா் சுப்பிரமணியம் உள்ளிட்டோா் கொடியசைத்து தொடங்கி வைத்தனா். இலவசமாக இயக்கப்படும் இந்த அரசுப் பேருந்துகளுக்கான கட்டணத்தை பழனி கோயில் நிா்வாகமே ஏற்றுக் கொள்கிறது.
இதேபோல, அந்த 3 நாள்களுக்கு பழனி மலைக் கோயிலில் கட்டண தரிசனங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனால் பக்தா்கள் அனைத்து தரிசன வரிசைகளிலும் கட்டணமின்றி சென்று சுவாமி தரிசனம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டது.
இந்த நிகழ்வில் இணை ஆணையா் மாரிமுத்து, அறங்காவலா்கள், நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி, அரசு போக்குவரத்துக் கழக அதிகாரிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.