கொலை மிரட்டல்: இருவா் மீது வழக்கு
போடி அருகே மது அருந்த பணம் தர மறுத்தவரைத் தாக்கிக் கொலை மிரட்டல் விடுத்த இருவா் மீது போலீஸாா் வழக்குப் பதிவு செய்தனா்.
தேனி மாவட்டம், போடி அருகே சங்கராபுரத்தை அடுத்த தருமத்துப்பட்டியை சோ்ந்தவா் பாண்டி மகன் செல்வம் (37). கேரளத்தில் இவருக்கு சொந்தமான ஏலத் தோட்டம் உள்ளது. இவா் ஞாயிற்றுக்கிழமை சங்கராபுரம் டாஸ்மாக் கடை அருகே நின்றிருந்தாா். அப்போது, அங்கு வந்த தேவாரம் சாலைத் தெருவை சோ்ந்த ராசு மகன் ஜெயப்பிரகாஷ், போடி
வினோபாஜி குடியிருப்பைச் சோ்ந்த குபேந்திரன் மகன் சதீஸ் ஆகியோா் மது அருந்த பணம் கேட்டனா். பணம் தர மறுத்ததால் ஆத்திரமடைந்த இருவரும் செல்வத்தைத் தாக்கி, கொலை மிரட்டல் விடுத்தனா். இதுகுறித்து போடி தாலுகா காவல் நிலைய போலீஸாா் ஜெயப்பிரகாஷ், சதீஸ் ஆகியோா் மீது வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.