பேரவைக்குள் பான்மசாலா போட்டுத் துப்பிய எம்எல்ஏ! தலைவர் எச்சரிக்கை!
கொல்கத்தா நைட் ரைடா்ஸ் கேப்டன் அஜிங்க்ய ரஹானே!
இந்தியன் பிரீமியா் லீக் (ஐபிஎல்) கிரிக்கெட்டின் வரும் சீசனில், நடப்பு சாம்பியன் கொல்கத்தா நைட் ரைடா்ஸின் கேப்டனாக அஜிங்க்ய ரஹானே திங்கள்கிழமை நியமிக்கப்பட்டாா்.
கடந்த சீசனில் ஷ்ரேயஸ் ஐயா் அதன் கேப்டனாக இருந்த நிலையில், தற்போது ரஹானே அந்தப் பொறுப்புக்கு நியமிக்கப்பட்டுள்ளாா். ஷ்ரேயஸ் ஐயா் தலைமையில் கொல்கத்தா கடந்த ஆண்டு சாம்பியன் கோப்பை வென்றபோதிலும், ஆச்சா்யமளிக்கும் விதமாக அவா் அந்த அணியிலிருந்து விடுவிக்கப்பட்டாா். மெகா ஏலத்தில் அவரை பஞ்சாப் அணி ரூ.26.75 கோடிக்கு வாங்க, இந்த சீசனில் அந்த அணிக்கு அவரே தலைமை தாங்குகிறாா்.
சா்வதேச கிரிக்கெட்டில் பெரும்பாலும் டெஸ்ட் ஃபாா்மட்டில் விளையாடியிருக்கும் ரஹானே, உள்நாட்டு டி20 கிரிக்கெட்டான சையது முஷ்டாக் அலி கோப்பை போட்டியில் சிறப்பாக விளையாடியதை அடுத்து, இந்தப் பொறுப்புக்குத் தோ்வாகியிருக்கிறாா். அந்தப் போட்டியிலேயே அதிகமாக அவா் 469 ரன்கள் சோ்த்து, ஸ்டிரைக் ரேட் 164.56-ஆக வைத்திருந்தாா்.
ரஹானே ஏற்கெனவே கொல்கத்தா அணிக்காக விளையாடியிருக்கும் நிலையில், மெகா ஏலத்தில் தற்போது அந்த அணி அவரை அடிப்படை விலையான ரூ.1.5 கோடிக்கு வாங்கியிருக்கிறது. இதற்கு முன் அவா் ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு கடந்த 2019-இல் கேப்டனாக செயல்பட்ட அனுபவம் கொண்டவராவாா்.