நெல்லை: கோயில் திருவிழா.. இருதரப்பு பிரச்னையால் அன்னதான பாத்திரங்களை அப்புறப்படுத்திய காவல்துறை!
நெல்லை பாளையங்கோட்டை கோட்டூர் ரோட்டில் சொக்கலிங்க சுவாமி கோயில் மற்றும் அய்யா வைகுண்டர் பதி அமைந்துள்ளது.
இந்தக் கோயிலில் வழிபாடு நடத்துவதில் இரு தரப்பிடையே நீண்ட காலமாக பிரச்னை இருந்து வருகிறது. இது தொடர்பாக நீதிமன்றம் சென்று வழிபாடு நடத்துவதற்கு மட்டும் அனுமதி பெறப்பட்டு விழாக்கள் நடந்து வருகின்றன. இந்த நிலையில், அய்யா வைகுண்டர் அவதார திருவிழாவையொட்டி அன்னதானம் வழங்குவதற்கான ஏற்பாடுகளை கோயில் பக்தர்களில் ஒரு தரப்பினர் ஏற்பாடு செய்திருந்தனர்.

ஆனால், அய்யா வைகுண்டர் கோயிலில் வழிபாடு நடத்த மட்டுமே நீதிமன்றம் அனுமதி கொடுத்த நிலையில், அன்னதானம் உள்ளிட்ட பிற நிகழ்வுகளுக்கும் அனுமதிக்கக்கூடாது என எதிர் தரப்பினர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அதனால் காவல்துறையினர் இரு தரப்பினரையும் அழைத்து சமாதானப் பேச்சுவார்த்தை நடத்தினார்கள் அதில், வழிபாடு மட்டுமே நடத்த வேண்டும் என்றும் அன்னதானம் உள்ளிட்ட பிற நிகழ்வுகளை நடத்தக் கூடாது எனவும் இரு தரப்பினரும் ஒப்புக் கொண்டனர். ஆனாலும் உள்ளூர் மக்கள் சிலர் அதை எதிர்த்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பாளையங்கோட்டை காவல்துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையைத் தொடர்ந்து இரு தரப்பினரின் சம்மதத்துடன் விழா நடத்துவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்றன. இந்தச் சூழலில் பேச்சு வார்த்தையை மீறி ஒரு தரப்பினர், கோயில் வளாகத்தில் அன்னதானம் செய்வதற்கான ஏற்பாடுகளை மேற்கொண்டனர். இன்று சமையல் வேலைகள் தொடங்கிய நிலையில், எதிர்த்தரப்பினர் ஆட்சேபம் தெரிவித்ததால் காவல்துறையினர் கோயிலுக்குள் புகுந்து சமையல் பாத்திரங்களை அப்புறப்படுத்திச் சென்றனர். அதனால் பக்தர்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது.

அந்த சமயத்தில் அய்யா வைகுண்டர் பதியில் சக்கரபாவனி நடந்து கொண்டிருந்தது. அப்போது, அன்னாதன நிகழ்ச்சிக்கு போலீஸார் தடை விதித்ததை அறிந்த பக்தர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். காவல்துறை அதிகாரிகள் தரப்பில் பக்தர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. ஆனால் அய்யா வைகுண்டரின் பக்தர்கள் சப்பரங்களுடன் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டதால் பரபரப்பு நிலவியது.
அந்தப் பகுதியில் போலீஸார் குவிக்கப்பட்டனர். அவர்கள் சாலையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்களை குண்டுக்கட்டாகத் தூக்கி காவல்துறை வாகனத்தில் ஏற்றினார்கள். அப்போது இரு தரப்புக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தச் சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.
Vikatan WhatsApp Channel
இணைந்திருங்கள் விகடனோடு வாட்ஸ்அப்பிலும்... CLICK BELOW LINK
https://bit.ly/VikatanWAChannel
