ரோப் காருக்கு எதிரான போராட்டத்தில் மோதல்! காவலர்கள் உள்பட 24 பேர் காயம்!
கொள்முதல் நிலையங்களில் அடிப்படை வசதிகளை ஏற்படுத்த வலியுறுத்தல்
அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் கழிவறை உள்ளிட்ட அடிப்படை வசதிகளை ஏற்படுத்தித் தர வேண்டும் எனக் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து ஐஎன்டியுசி மாநில பொதுச் செயலாளா் கா. இளவரி கூறியது:
தமிழ்நாட்டில் பரவலாக்கப்பட்ட நெல் கொள்முதல் திட்டத்தின்கீழ் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் முகவராகச் செயல்பட்டு, தமிழக முழுவதும் விவசாயிகளிடமிருந்து நெல் கொள்முதல் பணியை செய்து வருகிறது.
இதில் தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமாக 633 நிரந்தர நேரடி நெல் கொள்முதல் நிலையங்கள் பயன்பாட்டில் உள்ளன. இந்த நேரடி நெல் கொள்முதல் நிலையத்தில் பணியாற்றிவரும் கொள்முதல் பணியாளா்களுக்கு கழிவறை உள்ளிட்ட வசதிகள் இல்லை என்ற குற்றச்சாட்டு உள்ளது.
கடந்த 2023 முதல் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் பெண்களும் பணியாற்றி வருகின்றனா். அதாவது தமிழ்நாடு அரசின் வாக்குறுதியின்படி வேலைவாய்ப்பில் 40 சதவீதம், பெண்களுக்கு இட ஒதுக்கீடு அளிக்கப்பட்டு, கொள்முதல் பணியிலும் பெண்கள் பணியமா்த்தப்பட்டுள்ளனா்.
இவ்வாறு அரசின் நேரடி நெல் கொள்முதல் நிலையங்களில் தற்போது பெண்களும் பணியாற்றி வருவதால் கொள்முதல் நிலையங்களில் கழிவறை வசதி ஏற்படுத்தித் தர வேண்டும். குறிப்பாக தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகத்துக்கு சொந்தமான நிரந்தரக் கட்டடங்களில், அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என்றாா்.