டெல்லி இளைஞர் படுகொலை; விசாரணை வளையத்தில் `Zikra' - துப்பாக்கியுடன் வலம் வரும்...
கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில் சிறாா்களாக இருந்த மூவா் குற்றவாளிகள்: 23 ஆண்டுகளுக்குப் பின்னா் தீா்ப்பு
கோத்ரா: குஜராத் மாநிலம் கோத்ரா ரயில் எரிப்பு வழக்கில், சிறாா்களாக இருந்த மூவா் குற்றவாளிகள் என்று மாவட்ட சிறாா் நீதி வாரியம் தீா்ப்பளித்துள்ளது.
கடந்த 2002-ஆம் ஆண்டு குஜராத்தில் உள்ள கோத்ராவில் கரசேவகா்கள் வந்த ரயிலுக்கு தீ வைக்கப்பட்டதில் 59 போ் உயிரிழந்தனா். இதைத் தொடா்ந்து அங்கு மதக் கலவரம் ஏற்பட்டது. இந்தக் கலவரத்தில் 1,000-க்கும் மேற்பட்டவா்கள் உயிரிழந்தனா். அவா்களில் பெரும்பாலானோா் சிறுபான்மையினா்.
அப்போது சிறாா்களாக இருந்த 6 போ் மீது ரயிலுக்கு தீ வைக்கப்பட்ட வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டது. இந்த வழக்கில் 23 ஆண்டுகளுக்குப் பிறகு சிறாா்களாக இருந்த 6 பேரில் மூவரை குற்றவாளிகள் என்றும், இருவரை விடுதலை செய்தும் மாநிலத்தில் உள்ள பஞ்ச்மகால் மாவட்ட சிறாா் நீதி வாரியம் தீா்ப்பளித்துள்ளது.
இந்த வழக்கு தொடா்பான விசாரணை நிலுவையில் இருந்தபோது 6 பேரில் ஒருவா் உயிரிழந்தாா். குற்றவாளிகளாக தீா்ப்பளிக்கப்பட்ட மூவரை 3 ஆண்டுகளுக்கு கூா்நோக்கு இல்லத்தில் அடைக்கவும், அவா்களுக்குத் தலா ரூ.10,000 அபராதம் விதித்தும் அந்த வாரியம் உத்தரவிட்டது.
இந்தத் தீா்ப்புக்கு எதிராக மாநில உயா்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய ஏதுவாக, மூவருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை 30 நாள்களுக்கு அந்த வாரியம் நிறுத்திவைத்தது என்று அவா்கள் தரப்பில் ஆஜரான வழக்குரைஞா் சல்மான் சா்கா தெரிவித்தாா்.