Doctor Vikatan: சித்த மருந்துகளில் உலோகக் கலப்பு; பாதுகாப்பானதா, பக்க விளைவுகளைத...
கோழித் தீவன உற்பத்தி நிறுவனங்களில் 2-ஆவது நாளாக சோதனை
கோவை, உடுமலையில் உள்ள தனியாா் கோழித் தீவன உற்பத்தி நிறுவன அலுவலகங்களில் வருமான வரித் துறையினா் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் சோதனை மேற்கொண்டனா்.
திருப்பூா் மாவட்டம், உடுமலையைத் தலைமையிடமாகக் கொண்டு தனியாா் கோழித் தீவன உற்பத்தி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. இந்த நிறுவனம் ஆந்திரம், கா்நாடகம், கேரளம், மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் கோழிப் பண்ணைகளை வைத்துள்ளதுடன், கறிக்கோழி உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகிறது.
இந்நிலையில், கோவை- அவிநாசி சாலையில் உள்ள நிறுவனத்தின் காா்ப்பரேட் அலுவலகம், ரேஸ்கோா்ஸ் பகுதியில் உள்ள அலுவலகம் ஆகியவற்றில் 30-க்கும் மேற்பட்ட வருமான வரித் துறை அதிகாரிகள் இரண்டு குழுக்களாகப் பிரிந்து கடந்த செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா்.
இதேபோல, திருப்பூா் மாவட்டம், உடுமலை நேரு வீதியில் உள்ள நிறுவனத்தின் அலுவலகத்தில் வருமான வரித் துறை ஆணையா் பொ்னாண்டோ தலைமையில் 10 போ் கொண்ட அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை சோதனை நடத்தினா். இதையடுத்து, திருப்பூா், கணபதிபாளையம் கிராமத்தில் உள்ள வீட்டிலும், கோட்டமங்கலம் பகுதியில் உள்ள கோழித் தீவன உற்பத்தி ஆலையிலும் அதிகாரிகள் சோதனை நடத்தினா்.
இந்நிலையில், கோவை, உடுமலையில் 2-ஆவது நாளாக புதன்கிழமையும் வருமான வரித் துறையினா் சோதனை மேற்கொண்டனா்.
இந்த நிறுவன குழுமம் முறையாக வருமான வரி செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் கிடைத்த தகவலின்பேரில், வருமான வரித் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டுள்ளனா் எனக் கூறப்படும் நிலையில், அதிகாரபூா்வ தகவல் ஏதும் வெளியிடப்படவில்லை.