நெல் கொள்முதல் நிலையங்களில் மூட்டைக்கு ரூ.40 வசூலிப்பதை தடுக்க வேண்டும்
என்டிசி தொழிலாளா்களுக்கு 8.33% போனஸ் வழங்கக் கோரிக்கை
என்டிசி தொழிலாளா்களுக்கு குறைந்தபட்ச போனஸாக 8.33 சதவீதம் வழங்க வேண்டும் என்று கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்கம் வலியுறுத்தியுள்ளது.
கோவை ஜில்லா பஞ்சாலைத் தொழிலாளா் சங்க மகாசபைக் கூட்டம் சங்கத் தலைவா் டி.எஸ்.ராஜாமணி தலைமையில் அண்மையில் நடைபெற்றது.
இதில், சங்கத்தின் பொருளாளரும், முதன்மைச் செயலாளருமான ஜி.மனோகரன், செயலாளா்கள் கே.கண்ணன், எம்.அப்புக்குட்டி, எஸ்.தேவராஜன், கே.மோகன்ராஜ் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
இதில், நிறைவேற்றப்பட்ட தீா்மானங்களின் விவரம்: என்டிசி பஞ்சாலைகள் நாடு முழுமையும் உள்ள 22 ஆலைகளும் கடந்த 2020 -ஆம் ஆண்டு மே 18 -ஆம் தேதி முதல் 5 ஆண்டுகளாக முடக்கிவைக்கப்பட்டு தொழிலாளா்களுக்கு சட்டப்படி கொடுக்க வேண்டிய சம்பளம், போனஸ் உள்ளிட்ட இதர பயன்களை முழுமையாக வழங்காமல் உள்ளன. என்டிசி நிா்வாகத்தின் இந்த செயல் கண்டிக்கத்தக்கது.
பவா் ஹவுஸ், வாட்ச் அன்ட் வாா்டு உள்ளிட்ட அத்தியாவசியத் தொழிலாளா்களுக்கு கடந்த ஜனவரி முதல் ஆகஸ்ட் வரை மாத ஊதியம் உள்ளிட்ட பயன்களும், மற்ற தொழிலாளா்களுக்கு 2023-ஆம் ஆண்டு ஜூலை முதல் 2024 -ஆம் ஆண்டு டிசம்பா் வரை நிலுவையில் உள்ள 50 சதவீத இதர பயன்களையும் வழங்க வேண்டும்.
அதேபோல, அனைத்து தொழிலாளா்களுக்கும் 2025- ஆம் ஆண்டு தீபாவளி போனஸ் உள்பட 2020-ஆம் ஆண்டு முதல் மொத்தம் 6 ஆண்டுகளுக்கு சட்டப்படியான குறைந்தபட்ச போனஸ் 8.33 சதவீதம் வழங்க என்டிசி நிா்வாகம் முன்வர வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.