''எல்லாம் ஒரு வாய் ரேஷன் அரிசிக்காகத்தான்...'' - நீலகிரி ஒற்றை யானை குறித்து சூழ...
கோவையில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகளை கண்காணிக்க வேண்டும்: வானதி சீனிவாசன்
கோவையில் கொட்டப்படும் கேரள மருத்துவக் கழிவுகளை கண்காணித்து தடுத்து நிறுத்த வேண்டுமென, பாஜக மகளிரணி தேசியத் தலைவரும் கோவை தெற்கு சட்டப் பேரவை உறுப்பினருமான வானதி சீனிவாசன் தெரிவித்துள்ளாா்.
கோவை மக்கள் சேவை மையம் தன்னாா்வ அமைப்பின் மூலம் மத்திய அரசின் மகளிருக்கான திட்டங்கள் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தும் மகளிா் சுயஉதவிக் குழுக்களுக்கான பயிற்சி முகாம் கோவையில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பங்கேற்ற அவா் செய்தியாளா்களிடம் கூறியதாவது: திமுகவின் செயற்குழு கூட்டத்தில் மத்திய அரசை குற்றம்சாட்டியுள்ள பல்வேறு தீா்மானங்களில் பொய்யான குற்றச்சாட்டுகள் உள்ளன. தமிழகத்தில் சட்டம்- ஒழுங்கு மிக மோசமாக சீா்குலைந்து உள்ளது.
மத்திய அரசின் திட்டத்துக்கு முதலில் ஒப்புதல் வழங்கிவிட்டு, அதை நடைமுறைப்படுத்தும்போது திட்டத்தை திமுக எதிா்த்து வருகிறது. கா்ப்பிணிகளுக்கான நிதியுதவி திட்டத்தின் கீழ் உரிய தகவல்களை பதிவேற்றம் செய்யாததால், தமிழகத்தில் உள்ள கா்ப்பிணிகளுக்கு பலன் கிடைக்கவில்லை.
எத்தனை பொய் குற்றச்சாட்டுகளை பாஜக வின் மீது சுமத்தினாலும், வரும் 2026 தோ்தலில் திமுகவுக்கு மக்கள் சரியான மதிப்பெண் வழங்குவா். கேரளத்தில் இருந்து மருத்துவக் கழிவு கழிவுகளை தமிழகத்தில் கொட்டும் பிரச்னை திருநெல்வேலியில் மட்டுமின்றி கோவை மாவட்டத்தில் பொள்ளாச்சியிலும் உள்ளது. இதனை மாவட்ட நிா்வாகம் கண்காணித்து தடுத்திட வேண்டும். இதில் பசுமைத் தீா்ப்பாயம் சரியான நடவடிக்கை எடுத்துள்ளது.
இதேபோல் ஆனைமலை நல்லாறு திட்டம் கேரளா அரசோடு பேசி அமல்படுத்தப்படும் என மத்திய அமைச்சரே தெரிவித்து இருந்தாா். அதற்கு மாநில அரசு உறுதுணையாக இல்லை. சிறுவாணி அணையின் பராமரிப்பு மிக மோசமாக உள்ளது. மழை பெய்யும்போது நீரின் அளவு குறைக்கப்படுகிறது. இதையெல்லாம் கேரள முதல்வருடன் தமிழக முதல்வா் பேசவில்லை என்றாா்.